Tuesday, February 24, 2009

புக்ஃபேர்வழிகள்



புக்ஃபேர் செல்லும் அத்தனை பேர்வழிகளும் மெய்யாலுமே புத்தக பைத்தியவங்களா, பேருக்காவது ஆளுக்கொரு புத்தகம் வாங்குகிறார்களா என்று சர்வே செய்ததில் (வெட்டியாக இப்படி சர்வே செய்ய சென்று என்னையும் சேர்த்து) பலதரப்பட்ட புத்தகபுழுத்தோல் போர்த்திய வெத்துவேட்டு பேர்வழிகளை இனம் காண முடிந்தது. அப்பேற்பட்ட புக்ஃபேர்வழிகளில் சிலர்:-

கணக்கு சபாபதி:-

இவர் என்னவோ அசல் அக்மார்க் புத்தகபித்தர்தான், என்றாலும் 'எதை எடுத்தாலும் எட்டு ரூபாய்' வகை புத்தகத்தையும் காசு கொடுத்து வாங்காத மகாகணக்கர். கண்காட்சிகள் இருபது ரூபாய் 

கொடுத்து மூக்கால் அழுதுக்கொண்டு டிக்கட் வாங்கிக் கொண்டு போனாரானால்,

 தன்னுடைய அபிமான எழுத்தாளரின் லேட்டஸ்ட் வெளியீட்டை அது விற்கப்படும் ஸ்டாலின் ஒரு ஈசான 

மூளையில் நின்று கணிசமான நேரத்தில் படித்து முடித்தே விடுவார்.

அப்படி பாரதி பதிப்பக ஸ்டால்காரர் இவர் அதிக நேரம் நிற்பதை சந்தேகப்பட்டுவிடும் பட்சத்தில் சாரதி ஸ்டாலுக்குள் நுழைந்து அதே புத்தகத்தை எடுத்து பக்கத்திலிருந்து தொடரும் சாமர்த்தியசாளி.

இன்னிக்கு இருபது ரூபாய்க்கு அறுநூறு ரூபாய் புத்தகத்தை படித்தேனாக்கும் என்று பெருமைப்பட்டுக்கொள்வார்.  கொசுறாக, இதே டெக்னிக்கில்தான், தெலுங்கு, மலையாளம், கன்னடம் இத்யாகி முப்பது நாட்கள் புத்தகங்களை சில வருடங்களாக கண்காட்சி நாட்களில் பாதி கற்றுக் கொண்டிருக்கிறார்.


சந்திரபோஸ்:-

சந்திரபோஸ் கண்காட்சி தொடக்க நாளில் மட்டும் ஆஜர் ஆகிய பேர்வழி. எந்த புத்தகம் எந்த ஸ்டாலில் கிடைக்கும் என்பதைப் பற்றியெல்லாம் இவருக்கு தெரிய நியாயமில்லை.

ஆனால் அன்றைய தினம் ஏதாவதொரு நாலாம் தர டி.வி. சேனல் செய்தியில் ''நான் வருஷா வருஷம் புத்தக கண்காட்சியை 

ஆவலாக எதிர்ப்பார்ப்பேன். புத்தக ஆர்வலர்களுக்கு இது ஒரு வரபிரசாதம்'' என்ற ரீதியில் போஸ் கொடுத்து இவர் பேட்டி அளிப்பதை பார்க்கலாம்.

இதற்காக இவர் கண்காட்சியில் புத்தகத்தையெல்லாம் தேடும் வீண்வேலை செய்யாமல் தனக்கு படிகிற ஏதாவதொரு டி.வி. சேனல் பேட்டியாளரை தேடி அவரை தக்க வழியில் கவனித்து ரொம்ப காஸ்ட்லியாக மெனக்கெடுவார்.

''நேத்து 'சேச்சே' டி.வி.யிலே புக்ஃபேர் ஃபங்ஷன்லே உங்களை காட்டினானே... என்னென்ன புத்தகம் வாங்கினீங்க?'' என்று இவரை யாராவது கேட்கத்தான் செய்வார்கள்.

''ஹி! ஹி! ஒரு ஃபெரிஞ்ச் ஆர்தர் புக்கை தேடித்தான் போனேன். இன்னும் அந்த லெவல் புத்தகம் விக்கற அளவுக்கு புக்ஃபேர் வளரலே'' 

என்று அவர்கள் மறுகேள்வி கேட்கவிடாமல் செய்து விடுவார்.

குடந்தை குப்புசாமி:-

''ஸார்! குடந்தை குப்புசாமி எழுதின புத்தகம் இருக்கா?'' என்று ஒவ்வொரு ஸ்டாலாக ஏறி கேட்பதே இவருடைய வேலையாக கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்கின்றது.

''யோவ் யார்யா அந்த குடந்தை குப்புசாமி'' என்று விரட்டாத குறையாக இவரை ஸ்டால்காரர்கள் நோகடித்தாலும் தான்தான் அந்த குடந்தை குப்புசாமி என்பதை குடத்தில் வைத்த விளக்காய் இவர் காப்பாற்றி கொண்டிருக்கிறார்.

முட்டி மோதி மூன்றாண்டுகளுக்குமுன் கோதை நாயகி பப்ளிஷரில் உபயத்தில் தன் கதை தொகுப்பான 'சாம்பார் வடை'யை எப்படியோ புத்தகமாக பார்த்துவிட்டார். மேற்படி புத்தகம் வருடம்தோறும் எத்தனை விலை போகிறதென்று பார்க்க மட்டுமே புத்தக கண்காட்சிக்கு குப்புசாமி வருவது வாடிக்கையாகிவிட்டது.

இதில் வேடிக்கை என்னவென்றால் புத்தகம் அச்சான அந்த வருடம் இவரிடம் யாரோ கோதை நாயகி ஸ்டாலில் சாம்பார் வடை அமோக விற்பனையாகிறதென்று காதில் தேனூற்ற இவர் கண்காட்சிக்கு ஓடோடி சென்று கோதை நாயகி பிரசுர ஸ்டாலை தேடியபோது அங்கே அதே பெயரில் கோதை நாயகி கேன்டின் இருக்க, படுபாவிகள் சூடான வடையிலிருந்து எண்ணெய்யை ஒத்தி எடுக்க கிழித்துக் கொண்டிருந்தது 'சாம்பார் வடை' புத்தக பக்கங்களைதான்.

இருந்தாலும் வருடா வருடம் இவர் விசாரணை ஓயாமல் தொடர்கிறது.

விலாசம் மாமி:-

விசாலம் மாமியை விலாசம் மாமி என்பதில் பிழைக்காண வேண்டாம்.

மாமி ஒவ்வொரு வருடமும் புக்ஃபேருக்கு வந்து ஒரு பிக்ஷாப்பர் நிறைய அள்ளிக்கொண்டு செல்லும் சமாசாரம் புத்தகங்களாகத்தான் இருக்க வேண்டுமென நீங்கள் நினைத்தால் அது பிசகு.

எந்த ஸ்டாலின் உள்ளேயும் மாமி போயறியாள். ஸ்டாலின் முகப்பிலேயே டேபிள் சேர் போட்டு உட்கார்ந்திருக்கும் ஆசாமிகளிடம் அந்தந்த பிரசுரகாரர்களின் புத்தக பட்டியல் அடங்கிய லீஃப் லெட்களை சேகரித்துதான் பிக் ஷாப்பரை நிரப்புவாள் மாமி.

சுமார் ஐந்து வருடகாலமாக நான் தொகுத்திருக்கும் பயனுள்ள பாட்டி வைத்திய குறிப்புகளை எந்த பப்ளிஷராவது போட்டுத் தொலைப்பானா என்ற ஏக்கத்தில், பதிப்பாளர்களில் விலாசத்தை சேகரிப்பதே மாமியின் புத்தக கண்காட்சி வருகையின் நோக்கம்.  இதுவரை எந்த பதிப்பாளரும் மசிவதாக தெரியவில்லை.  'பதிப்பாளர்களின் விலாசங்களும், அவர்களின் விசால மனதும்' என்ற தலைப்பில் புத்தகம் போட முயற்சிக்க மாமியிடம் யாராவது சொல்லி பார்த்தால் தேவலாம்.

'பரிசு'த்தநாதன்:-

மாமியாவது ஸ்டால் வரை செல்வார். நம் பரிசுத்தநாதன் டிக்கெட் வாங்கிய அடுத்த க்ஷணமே விருட்டென்று டிக்கெட்டின் கவுண்டர் ஃபாயிலை கிழித்து தன் விலாசம் இத்யாதிகளை எழுதி வைத்திருக்கும் பெட்டியில் போட்டுவிட்டு சட்டென்று வெளியேறிவிடுவார்.

பரிசுபெற்ற நாவலையோ, அதை படிக்கும் ஆவலையோ அறியாத பரிசுத்தநாதனுக்கு ஒருமுறை குலுக்கலில் இரண்டாயிரம் பெறுமான புத்தகம் பரிசாக விழுந்துவிட்டது. அதை அப்படியே ஐம்பது பர்சன்ட் டிஸ்கவுண்டில் ஒரு புத்தக பைத்தியத்திடம் விற்று ருசி கண்டுவிட்டதில், வருஷா வருஷம் ஏன் விழக்கூடாது

 என்ற நம்பிக்கையோடு டிக்கெட் வாங்க மட்டும் வரும் பேர்வழி இவர்.

அறுசுவை அருணாசலம்:-

டிஸம்பர் சீசன் முடிந்த வாயோடு அல்லது கையோடு ஜனவரி சீசனில் அருணாசலம் நாடுவது புத்தக கண்காட்சியின் கான்டீனையே! ஷுகர், பிரஷர் என்று வீட்டில் ஏகப்பட்ட கெடிபிடிகளிலிருந்து தப்பித்து இங்கு ஒரு  பிடிபிடித்துவிட்டு போகவே தினம்தோறும் வருபவர்.


''பாவம் எங்காத்துகாரருக்கு புத்தகம்னா ஒரே பித்து'' என்று எங்காத்துகாரரும் கச்சேரி போகிறார் ரீதியில் மனையாள் பெருமைபட்டாலும் ''தினமும் புக் எக்ஸிபிஷன் போறீங்களே... பேருக்காவது ஒரு புத்தகத்தை வாங்கிட்டு வந்த மாதிரி தெரியலையே அங்கே போய் என்னத்தைதான் செய்வீங்களோ'' என்று சந்தேகப்படாமலும் இல்லைதான்.

இப்படிப்பட்ட புக்ஃபேர்வழிகள் பல தினுசிலும் கண்காட்சியில் திரிவது அந்த அம்மையாருக்கு தெரிய நியாயமில்லை.


No comments:

Post a Comment