Monday, November 1, 2010

எந்திரன் ஸ்வீட்!


கறவை கண்ணம்மா செய்யும் கறிவேப்பிலைத் துவையல், மைக்ரோ அவன் மைதிலி போட்டுக் காண்பிக்கும் மல்லி சுக்குக் காப்பி என படுசிம்பிளாக டீ.வி. ‘தடபுடல் சமையல்’ நிகழ்ச்சியை ஒப்பேற்றிக் கொண்டிருந்த தயாரிப்பாளருக்கு தீபாவளி ஸ்பெஷலா டைரக்டர் சங்கரை அணுகலாமே என்ற

எண்ணம் ஏற்பட்டது. உடனே சங்கர் வீட்டுக்கு ஓடினார்.

புரோகிராம் டிஸ்கஷனையே ஈஃபிள் டவர் மேல்தான் பண்ணுவேன் என்று சங்கர் அடம் பிடிக்க, இந்தச் சிறப்பு நிகழ்ச்சிக்கு பசையுள்ள விளம்பரதாரர்கள் கிடைக்காமலா போய் விடுவார்கள் என்ற நப்பாசையோடு இவரும் இசையலானார்.


டைரக்டர் சங்கர்: அப்போ டேட்ஸ் எல்லாம் வாங்கிடுங்க!

தயாரிப்பாளர்: (பேரீச்சம்பழத்தை வைத்து சங்கர் ஸ்பெஷல் ரெசிபியை சொல்ல உத்தே சித்திருப்பார் என்று இவராக உத்தேசித்துக் கொண்டு) ஆஹா! வாங்கிட்டாப் போச்சு... எத்தனை பாக்கெட் தேவைப்படும்?

சங்கர் (கிராஃபிக்ஸ் இல்லாமலே முகம் கடுமையாக): என்ன ஸார் விளையாடறீங்களா? நான் கேட்டது ரஹ்மான் ‘டேட்’டும், வைர முத்து ‘டேட்’டையும்!

தயாரிப்பாளர்: ஸார், நாம சினிமா படம் ஒண்ணும் எடுக்கலையே. எதுக்கு ரஹ்மானும், வைரமுத்துவும்?

சங்கர்: ஓகோ! இந்த அல்ப ஐம்பது கோடி பட்ஜெட்லே என்னை சினிமா படம் வேற எடுக்க வைக்கலாம்ணும் உங்களுக்கு ஆசையிருக்கு போலிருக்கு.

தயாரிப்பாளர்: ஐயையோ ஐம்பது கோடி ஆகுமா? அத்தனை எதுக்கு?

சங்கர்: என்ன ஸார் வாயைப் பொளக்கறீங்க? நிகழ்ச்சியோட முதல் ஷாட்லேயே ஆயிரம் லாரிங்க அணிவகுத்து போற மாதிரி காட்டப் போறோம். தடபுடலா அதை ஆரம்பிக்க அமர்க்களமா ஒரு பி.ஜி.எம்.எஃபெக்ட் கொடுத்தாகணும். அதுக்கு ரஹ்மான் ‘சுவிஸ்’ போய் கம்போஸ் பண்றாரோ, சிட்னி போய் ரெகார்ட் பண்ணுவாரோ யார் கண்டது?


தயாரிப்பாளர்: ஸார்! நாம் தயாரிக்கப் போறது சாதாரண சமையல் நிகழ்ச்சிதான். அதுக்கு இத்தனை ஸ்பெஷல் டிரீட்மெண்ட்டெல்லாம் தாங்குமா?

சங்கர் (கோபமாக எழுந்து): இதுக்குத்தான் நான் சின்ன பட்ஜெட் ஆசாமிங்களை அண்டவே விடறதில்லே.

தயாரிப்பாளர் (வெலவெலத்துப் போய்..): ஸார் கோவிச்சுக்காதீங்க. நான் ஒரு மடையன். இப்பத்தான் புரியுது. நீங்க செஞ்சு காட்டப் போற ஸ்வீட்டுக்குத் தேவையான கோதுமை மாவு, சர்க்கரை, நெய், முந்திரி எல்லாத்தையும் எல்லா நிகழ்ச்சிகளைப் போல கிண்ணத்திலே வெச்சுக் காட்டாம அதையெல்லாம் லாரி லாரியா வந்து இறங்கற மாதிரி பிரம்மாண்டமா காட்டிட்டு அப்பால ஸ்டூடியோ உள்ளே வந்து ஸ்டவ் கடாய் முன்னாலே நீங்க க்ளோசப்பிலே வருவீங்க... சரிதானே!

சங்கர்: நாசமாப் போச்சு! நிகழ்ச்சிக்கு நீங்க டைரக்டரா? நானா? உங்க ஸ்டூடியோவுக்குள்ளே அத்தனை சிம்பிளாவா இதைச் செய்ய முடியும்? ஒரு பிரம்மாண்டமான ஃபேக்டரியிலேதான் இந்த ரெஸிபி தயாரிப்பைக் காட்டியாகணும். பெரிய பெரிய ‘ஃபர்னஸ்’ அடுப்புல. சுமார் ஆயிரக்கணக்கான டிகிரியிலேதான் ‘குக்’ பண்ணப் போறோம். தயாரிச்சு முடிச்சதும் அதை கன்வேயர் பெல்ட் மூலமா கொண்டு, மலை மலையா குவிக்கற மாதிரி காட்டறோம். அது குதிச்சு நகரும் சுட்சிவேஷனுக்குத்தான் வைரமுத்து ஸாரை ‘லிரிக்’ போடச் சொல்லணும்னு இருக்கேன்.

தயாரிப்பாளர்: ஐயையோ... ஒரு அல்ப தீபாவளி ஸ்வீட் தயாரிப்பைக் காட்ட எதுக்கு இதெல்லாம்?

சங்கர்: நான் பண்ணிக் காட்டப் போறது அல்பமான ஸ்வீட்டா? இது எந்திரன் ஸ்பெஷல் ஸ்வீட். லாரியிலே அதுக்காக தாதுப் பொருள்களை ஏத்திட்டு வர்றதிலேர்ந்து ஆரம்பிச்சு, ஜெர்மனிக்கெல்லாம் போகாட்டாலும் பிலாய், ரூர்கேலான்னு நம்ப நாட்டிலேயாவது ஒரு ஃபேக்டரிக்கு போய்த் தான் ‘எந்திரன் ஸ்வீட்’டை உருக்கி எடுக்கறாப் போல ‘லைவ்’வா காட்டியாகணும்!

தயாரிப்பாளர்: என்ன உருக்கி எடுக்கப் போறோமா? இது என்ன இரும்புக் கம்பியா? தீபாவளி ஸ்வீட் ஸார்.

சங்கர்: எனக்கு நீங்க சொல்லித் தர்றீங்களா... இது தீபாவளி ஸ்வீட்தான். ஆனா எந்திரன் சாப்பிடற ஸ்வீட்டாச்சே! இரும்புத் தாதுவை உருக்கி, கம்பி கம்பியா முறுக்கி செய்யாமே எப்படிச் செய்றதாம்!

ஈஃபிள் டவரிலிருந்து மயங்கி விழாமல் எப்படியோ சமாளித்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிவந்தார் தயாரிப்பாளர்.

இயக்குநர் சங்கர் செய்யப் போகும் நிகழ்ச்சி என்று தடபுடலாக அறிவித்து விட்டதால், சங்கர் என்ற பெயரில் ஏதோ ஒரு அரசாங்கத் துறையில் இயக்குநராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஆசாமியைத் தேடிப் பிடித்து சமாளித்தாக வேண்டுமே என்று அடுத்த ஓட்டம் பிடித்தார்.

அகிலா கார்த்திகேயன்


Thursday, June 4, 2009

டேக் இட் ஹி... ஹி...!

நுனி விரலைக் கடித்தபடி யோசனை செய்ய ஆரம்பித்தேன். நகச்சுவைதான் தெரிந்ததேயன்றி நகைச்சுவையாக எந்த ஐடியாவும் வரமறுத்தது. கோடை காலப் புழல் ஏரியாய் என் மூளையின் ஹாஸ் 'ஏரியா'வில் அப்படி ஒரு வரட்சி. 'இன்னும் ஒரு வாரத்தில் கொடு' என்று என் நண்பன் ராகவன் கெடுவோடு சொல்லிச் சென்று ஆறு நாட்களாகி விட்டன. நானும் நாடகத்துக்காக நகைச்சுவையான கரு கிடைக்குமா என்று காத்திருந்ததுதான் மிச்சம்! உருப்படியாக ஒன்றும் தோன்றமாட்டேன் என்றது.
''நான் வேணும்னா கிச்சு கிச்சு மூட்டி விடட்டுமா சொல்லுங்கோ'' என்று பரிட்சைக்குப் படிக்கும் பாலகனைத் தூண்டுவதுபோல என் மனைவி என்னை சீண்டி கிச்சு கிச்சு மூட்ட அருகே வந்தே விட்டாள்.''இன்னிக்கு ராத்திரிக்குள்ளே எழுதினாத்தான் ராகவன் ஸார்கிட்டே நாளைக்கு கார்த்தாலே கொடுக்க முடியும்.. வருஷப் பொறப்பன்னிக்கு டி.வி. சிறப்பு நிகழ்ச்சிக்காக கேட்டிருக்கார். நீங்க எழுதவே வருஷம் ஆயிடும் போலிருக்கே!'' என்றாள் வனஜா.


''நாடகம் நல்லா சிரிப்பா இருக்கணும்னு ராகவன் சொன்னார். எனக்கு ஹாஸ்யமா ஒரு ஐடியாவும் வரலையேன்னு அழுகையா வருது வனஜா'' என்றேன் பரிதாபமாக.


''ஏதோ ஆள் அழகோ, அந்தஸ்தோ இல்லேன்னாலும் நாலு பத்திரிகையிலே பேர் வர்ற மாதிரி என்னமோ கிறுக்கிக் கிட்டிருக்கீக்ளேன்னு இருந்தேன். இப்போ அதுவும் போச்சாக்கும்... அப்படி என்ன குடிமுழுகிப் போச்சாம் உங்களுக்கு... நல்லாதான் கவலையில்லாம சாப்பிடறீங்க.... குறட்டைவிட்டுண்டு தூங்கறதிலே குறைச்சலில்லே... அப்புறம் என்ன கேடாம்...


என்னை இப்படி வலுக்கட்டாயம் செய்தாலாவது 'கிளுக் கிளுக்' ஊட்டும்படி எழுத ஆரம்பிப்பேனோ என்று வனஜா நினைத்தாளோ என்னவோ....
அடுத்த நாள் தடியால் அடித்து கனிய வைத்த பழம் கணக்காய் ஒரு கத்தை பேப்பரை 'கடி'யால் அடைத்து சிரிப்பு நாடகம் என்ற பெயரில் ராகவனிடம் கொடுத்து விட்டு வந்தேன்.


ராகவன் பாவம், என் மேல் அபார நம்பிக்கையோடுதான் அதைப் பெற்றுக் கொண்டார்.


அது ஏனோ தெரியவில்லை, சில நாட்களாக என் சிந்தையில் நகைச்சுவை உணர்வே இல்லாதது பெரிய விந்தையாக இருந்தது. இயல்பில் நான் சீரியஸ் சமாசாரங்களையும்கூட 'சிரி'யஸாகவே பாவித்துப் பழக்கப்பட்டவன். இதற்காகவே யாராவது இறந்துவிட்டால் அவர் வீட்டிற்குப் போவதைக் கூடிய மட்டும் தவிர்ப்பேன். துக்கம் கேட்கப்போன இடத்தில் பக்பக்கென்று எதையாவது நினைத்து சிரித்து விடுவேன். ஆனந்தக் கண்ணீர் மாதிரி இது சோகச்சிரிப்பு என்று யாராவது சந்தேகமாகப் பார்க்கும் பட்சத்தில் சொல்லி, தப்பித்ததுண்டு. இப்படி யார் எரிச்சலைக் கொட்டிக் கொண்டேனோ தெரியவில்லை.... இப்பொழுது அந்த உணர்வே இல்லாமல் அலைகிறேன்.


''பொறக்கும்போது சம்பிரதாயத்துக்கு அழுததோட சரி; அப்புறம் அழுதே பார்த்ததில்லே! எப்பவும் சிரிப்புதான்!'' என்று சிறு வயதிலேயே என் 'கெக்கேபுக்கே'க்களுக்கு பொக்கே கொடுத்து வளர்த்து விட்டாள் என் தாய். சென்ற நாற்பதாண்டு காலமாய் அதை வளர்த்து வந்தவன், இப்பொழுது அது வாடிப் போய் இருப்பதில் வருத்தமுற்றிருந்தேன்.


வனஜா சொல்லுவதுபோல அப்படி ஒன்றும் கவலைப்படுவது போன்ற சம்பவம் சமீப காலத்தில் நிகழவில்லை. ஆறு மாதத்திற்கு முன் என் ஒன்று விட்ட தாத்தா உயிரைவிட்டார். 'அப்பாடி, இனிமேல் அடிக்கடி பணம் கேட்டு நச்சரிக்க மாட்டார்; கவலை விட்டது' என்றுதான் அதை எடுத்துக் கொண்டேனேயன்றி அவர் மறைவுக்கும் வருத்தப்படவில்லை.


ஆபீஸிலும் என்னை வைத்து வேலை வாங்குவது அவர்களுக்குத்தான் பிரச்னையே தவிர, வேலையால் எனக்கொன்றும் ப்ராள்பம் ஏற்பட வாய்ப்பில்லை.


ஆக, அடிக்கடி கிண்டல் கேலியாக எழுதிக் கொண்டிருந்தவன் இப்பொழுது நகைச்சுவை சிந்தனைப் பஞ்சத்தால் ராகவன் கேட்ட நாடகத்தை எழுதித்தர இப்படி திணறவேண்டியதாயிற்று. காரணம் புரியாமல் தவித்தேன்.
எதையும் 'டேக் இட் ஹி...ஹி...' யாக எடுத்துக் கொள்பவன், இதை அத்தனை ஈஸியாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.


நான் நினைத்தது போலவே ராகவன் இரண்டு நாட்களுக்குப் பிறகு போன் செய்தார்.


''உனக்கு என்ன ஆச்சு... உன்கிட்டேயிருந்து நான் கொஞ்சம் நல்ல சரக்காக எதிர்பார்த்தேன்.... இப்படி சொதப்பலா எழுதியனுப்பியிருக்கியே!'' என்று ராகவன் சொன்னபோது எனக்கு பயம் கண்டுவிட்டது... என்னை விட பல மடங்கு வனஜா பயந்தாள். அக்கம்பக்கத்தில் தன் புருஷனைப் பற்றி பெருமையடித்துக் கொள்ள முடியாதே என்ற கவலை அவளுக்கு.


''சரி உங்க ஜாதகத்தை எங்க அப்பாகிட்டே காட்டறேன்'' என்று எடுத்துக் கொண்டு போனாள். அவரோ, என்னுடைய இந்த நிலைக்கான காரணத்தை ஜாதகத்தில் ஆராயாமல் கண்டதையும் பார்த்து, என் கிரகநிலைப்படி தனக்கு தற்போது ஒரு கண்டம் என்று கணித்துவிட்டு கவலைப்பட ஆரம்பித்துவிட்டார்.


யாரோ சொன்னார்களென்று சுவாமி சிரிமியோநந்தாவிடம் போனால் சரியாகிவிடும் என்று என்னை வனஜா அழைத்துக்கொண்டு திருவொற்றியூர் போனாள். நாங்கள் போவதற்குள் அவரை போலி சாமியார் லிஸ்டில் கைது செய்து விட, அவர் பிழைப்பே சிரிப்பாக சிரித்துவிட்டது.


வனஜா வல்லாரை அரைத்து விழுங்கச் சொன்னாள். ஆபீஸில் சம்பத், 'பி.ஜி.உடோஸ்' படிக்கச் சொன்னார். ஊஹும்... பாலைவனத்திலாவது ஊற்றுயிருக்கு... வரண்ட மனதில் ஒரு கீற்றுகூட சிரிப்புணர்வு ஏற்படவில்லை.


''சரி வேற வழியே இல்லே! சைக்கோ சாமிநாதனை பார்ப்போம் வாங்க'' என்று வனஜா அழைத்தாள்.

''எந்த தியேட்டர்லே ஓடறது?'' என்றேன் ஏதோ சிரிப்புப் படத்துக்கு கூப்பிடுகிறாளோ என நினைத்து.

''ஐயோ... சினிமாவுக்கு இல்லே... 'சைக்கோ சாமிநாதன்' பெரிய மனோ தத்துவ டாக்டராக்கும்!'' என்றாள்.


''அடிப்பாவி... என்னை என்ன மனோ வியாதிக்காரன்னு நினைச்சியா... கிண்டலா?'' என்றேன்.

''இதுவும் ஒரு வகையான மெண்டல் அப்செட்தான்... உங்களுக்கு என்ன! பேசாம வாங்கோ'' அதட்டினாள்.

''என்னடி... பெரிய சைக்கியாடிரிஸ்ட்'னு சொல்றே! பீஸ் ரொம்பவும் தீட்டிடப் போறார்'' என்று பயந்தேன்.


''அதெல்லாம் கம்மியாத்தான் வாங்குவார்'' என்றாள் எல்லாம் தெரிந்தவள்போல.

''உனக்கு எப்படித் தெரியும்?''

''கல்யாணமாகிறதுக்கு முன்னாலே நான் அவர்கிட்டேதான் ட்ரீட்மெண்ட் எடுத்துண்டேன்'' என்று ஒரு குண்டைத் தூக்கிப்போட்டு என்னை மேலும் கலக்கி விட்டு சாமிநாதனிடம் அழைத்துச் சென்றாள்.


சைக்கோ சாமிநாதன் என்னை ஒரு பார்பர்ஷாப் சேரில் உட்கார வைத்து எதிரே இருந்த சக்கரத்தைக் காண்பித்தார்.


''கேள்விக்கு சரியா பதில் சொன்னா வீலை சுத்தலாமா டாக்டர்?'' என்று .வி. ஆட்டம் நினைப்பில் கேட்டு வைத்தேன்.


''நிறைய டி.வி. பார்ப்பீங்க போலிருக்கு!'' என்று அலுப்பாக சொல்லிவிட்டு எதிரேயிருந்த சக்கரத்தில் கவனம் செலுத்தி உற்றுப் பார்க்கச் சொன்னார்.
''ரிலாக்ஸ்....ரிலாக்ஸ்....'' என்றவர் ''இப்போ நீங்க கொஞ்சம் பின்நோக்கிப் போறீங்க... பின்னோக்கிப் போறீங்க'' என்றபடி என்னை மெஸ்மெரைஸ் செய்ய முயற்சிக்க, நான் நிஜமாகவே பின்னோக்கி சாய்ந்ததில் சேரிலிருந்து மல்லாக்கில் விழுந்து, பின்னால் மானிட்டர் போன்ற ஒரு காஸ்ட்லி கருவியைக் கீழே தள்ளி உடைத்தேன்.


டாக்டர் மனமும் உடைந்து விட்டது. என்னிடம் ஏதேதோ கேள்விகளைக் கேட்டு விட்டு, வனஜாவைக் கூப்பிட்டு தனியாக அழைத்துக் கொண்டுபோய் எதையோ சொன்னார்.


''ஓகோ அதுதான் காரணமா டாக்டர்... நான் கவனிச்சுக்கறேன்'' என்று டாக்டரிடம் கூறியவள், என்னை ஓரக் கண்ணால் பார்த்தாள்... ''ஐயையோ என்ன மனசிதைவோ எனக்குத் தெரியவில்லையே'' என்று பயப்பட ஆரம்பித்தேன்.


அன்று இரவு.

''எட்டு மணிலேர்ந்து எட்டரை வரைக்கும் தினமும் வாக்கிங் போறீங்க... அதே மாதிரி இரவு ஒன்பது மணிலேர்ந்து அரை மணி வாக்கிங்.... வெள்ளிக்கிழமை ராத்திரி ஒன்பதரை 'டு' பத்து வாக்கிங்.''
''இது என்னடி, பைத்தியக்காரத்தனமான ராத்திரி ரவுண்ட் அப்!''
''இந்த நேரங்கள்லே நீங்க டி.வி. பார்க்கக் கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்கார்'' என்றாள் கண்டிப்பாக.


''இது என்னடி பினாத்தல்?''

''ஆமாம் பினாத்தல்தான்! தினமும் எட்டு மணிக்கு 'சிரிக்கப்போவது யாரு?'' ஒன்பது மணிக்கு 'காமெடி சூப்பர் மார்க்கெட்', வெள்ளிக்கிழமை ராத்திரி ஒன்பதரை மணிக்கு 'சிரிப்பதற்கு சிந்திக்காதே' எல்லாமே பெனாத்தலான நாடகம்தான்... யாரும் அதை பார்த்துட்டு சிரிக்கலேன்னாலும் பேக்கிரவுண்ட் மியூஸிக் காட்டாம அவாளே ரெக்கார்ட்டெட் சிரிப்பை கெக்கேபுக்கேன்னு ஓடவிட்டுடறா.''


''காய் வாங்கப் போறயா'ன்னு வசனம் வந்தாலும் சிரிப்பு, ''செருப்பாலே அடிப்பேன்''னு யாராவது சொன்னாலும் சிரிப்பு... இந்த மாதிரி அசட்டுபிசட்டு டி.வி. டிராமாவ நீங்க அதிகமா பார்க்கிறதாலேதான் உங்களுக்கு சிரிப்பா சிந்திக்கவே முடியாம போயிருக்கும்னு டாக்டர் உறுதியா நம்பறாரு... அதனால இனிமே இந்த மாதிரி தத்து பித்து நாடகத்தை பார்க்கறதை நிறுத்தினாத்தான் உங்க நகைச்சுவை திரும்பவும் துளிர்விடும்னு டாக்டர் சொல்லிட்டார்!'' என்றாள் வனஜா.


சைக்கோ சாமிநாதன் கில்லாடிதான் என்று எனக்கு தோன்றியது. அவர் பிரிஸ்கிரிப்ஷன் பிரகாரம் அந்த அச்சு பிச்ச நாடகங்களை தவிர்த்தவுடன் என்னிடம் மாற்றம் தெரிந்தது. ஏழையின் இரைப்பிலும் சிரிப்பைக் காண ஆரம்பித்துவிட்டேன்.


இன்னொரு சமாசாரம்... வருடப் பிறப்பு சிறப்பு நிகழ்ச்சியில் வேறு வழியேயில்லை என்று நான் எழுதிக் கொடுத்த குப்பையை நாடகமாக ஒளிபரப்பினார்கள்.... ஒரே சிரிப்புத்தான் போங்கள்.... பார்த்தவர்களின் சிரிப்பென்று தவறாக நினைக்க வேண்டாம். அதுவும் பேக்கிரவுண்ட்லே அடிக்கடி ஒலித்த ரெக்கார்டட் சிரிப்புதான்!

Monday, April 6, 2009

ஜெயஹோ! ஐய்யஹோ!!

த்துக்கார் வந்ததுகூட தெரியாமல் சமையலறையில் என் மனைவி அந்த ஆஸ்கர் பாடலை அலறவிட்டுக் கொண்டிருந்தாள். ஒரு பக்கம் குக்கர் 'ஹோ' என்று சப்தம்போட அதற்கு ஒத்த பக்கபலமாக 'ஜெ

ய் ஹோ' அதையும் மீறி கத்திக் கொண்டிருந்தது.


சுப்ரபாதம், கந்த சஷ்டி கவசம் இத்யாதிகளை பிரத்யேகமாக கேட்க சமையல்கட்டில் என் மனைவியின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்த அந்த மியூஸிக் சிஸ்டம் அன்றைய தினம் பக்திமார்கத்திலிருந்து விடுப்பட்டு விடாமல் 'ஜெய் ஹோ'வை கத்திக் கொண்டிருந்தது.எனக்கென்னவோ இந்த ஆஸ்கர் ரோஜா ரஹ்மானின் இந்த 'ஜெய்ஹோ' அப்படி ஒன்றும் ஜோராக ரசிக்கும் ரகமாக தோன்றவில்லை. சின்ன சின்ன ஆசையை கேட்டபோது எற்பட்ட ஆசையோ, 'ஒரு தெய்வம் தந்த பூவே'வில் கிடைத்த சுகந்தமோ இந்த ஆஸ்கர் பாட்டில் அப்படி எதுவும் இருப்பதாக தெரியவில்லை.ஏன் என் மனைவியே கூட நேற்றுவரை 'உங்களுக்கு பிடித்த ரஹ்மான் பாடல் எது?' என்ற கேள்விக்கு 'ஊஊ லல்லா' என்றுதான் ஊளைவிட்டிருப்பாள். ஆனால் இன்றோ ஆஸ்கர்காரன் அங்கீகரித்து விட்டானென்ற ஒரே காரணத்திற்காக தன் ரசனையில் இப்படி பால்மாறியிருக்கிறாள்.''கொஞ்சம் வால்யூமை கம்மி பண்ணேன்'' என்று பவ்யமாகத்தான் விண்ணப்பித்தேன்.

உடனே எகிறினாள் ''சே! உங்களுக்கு நம்ப தமிழ்நாட்டு பையன் இப்படி உசந்த ஆவார்டை வாங்கிண்டு வந்திருக்காரேன்னு ஒரு இது இருக்கா? அப்ரிஷியேட் பண்ண வக்கில்லாட்டாலும் வாயை மூடிட்டு கேட்கவாவது தெரியணும்... அடடா என்னமோ மியூஸிக் போட்டிருக்காரு இதையெல்லாம் ரசிக்க ஒரு இது வேணும்'' என்று வால்யூமை இன்னும் கொஞ்சம் அதிகமாக்கி தனக்கு 'இது'க்கள் அதிகமாக இருப்பதை என் செவியில் அரைவதுபோல் தெரிவித்தாள்.ஹாலில் உட்கார்ந்திருந்த எனக்கு இந்த சப்தம் தாங்கமுடியவில்லை. ஆஸ்கர் அருமையை இப்படி 'சப்தம்' என்று சிலாகிப்பதற்காக என்னை நாட்டுணர்வு, தமிழுணர்வு இன உணர்வு இன்னபிற உணர்வுகளே இல்லாத ஜந்து என்று நீங்கள் சப்தம் போடலாம். இருந்தாலும் இந்த 'ஜெய் ஹோ' என் ரசிப்பின் டாப் டென்னில் என்ன டாப் நூறிலும் வராத ரகமாகத்தான் இருக்கிறது.

ஹாலில் உட்கார முடியாமல் என் பெண் உட்கார்ந்து கம்ப்யூட்டரோடு கைகலந்து கொண்டிருந்த அறைக்கு போக எழுந்தேன். எப்போதும் என் பெண் கனிணியோடு ஓசைப்படாமல் எதையாவது பணி செய்துக் கொண்டிருப்பாள். அவள் அறையில் மெளஸ் தேய்க்கும் சப்தம் மட்டும் நிசப்தத்தில் ஓங்கி கேட்கும். அங்கே போனால் கொஞ்சம் 'காதாட' உட்காரலாமென்று நினைத்தபடி கதவை திறந்துபோது, எப்போதடா திறப்பான் என்பதுபோல உள்ளேயிருந்து 'ஜெய்ஹோ' காதில் வந்து பாய்ந்தது. எப்போதும் 'கம்' மென்று உட்கார்ந்து கம்யூட்டர் இயக்குபவள் இன்று 'ஐட்யூனில்' ஆஸ்கர் பாடலை அலறவிட்டுத் தேடி கொண்டு ஆட்டத்தோடு கேட்டுக் கொண்டிருந்தாள்.மறுபடியும் ஹாலே கதி என்று உட்கார வந்தபோது எங்கேயோ வெளியே போயிருந்த என் மகன் படபடப்போடு உள்ளே வந்து டி.வி ரிமோட் பட்டனை படபடவென்று அழுத்த ஆரம்பித்தான்.

''ஏம்ப்பா! ரஷ்மான் ஆஸ்கர் அவார்ட் வாங்கறதை 'லைவ்'வா காட்டறான்... அதை பாக்காம என்ன பண்றீங்க எல்லாரும்'' என்று, சேனல்கள் ஒவ்வொன்றாய் தாவ எல்லா சேனல்களிலும் 'ஜெய் ஹோ' நிறைந்து வழிந்துக் கொண்டிருந்தது. இவனிடம் எக்குதப்பாக எதையாவது பேசி ரசனை இல்லாத ஜன்மம் என்றெல்லாம் அவார்ட் வாங்க பயந்து எங்கே ஒதுங்கலாமென்று இடத்தை தேடினேன்.திக்கெட்டிலும் ஜெய்ஹோ தாக்கியதில், திக்கற்றவனாய் என் பாட்டி ஏகாந்தமாய் ஒண்டிக் கொண்டிருந்த வீட்டின் அந்த கோடி அறைக்கு போக உத்தேசித்தேன்.

என் பாட்டி தொண்ணூறு வயதை எட்டி பார்த்துக் கொண்டிருப்பவள். சதா நாம ஜபம்தான்! வாய் திறந்து பேசுவது அபூர்வம். நல்ல சேதியோ, கெட்ட சேதியோ எதை சொன்னாலும் ஜபம் செய்தபடியே, தலையை ஆட்டியோ தன் நாள்பட்ட கரங்களால் நாட்டிய முத்திரை காட்டியோதான் அதற்கு ரியாக்ட் செய்வாள். அதற்கெல்லாம் வாய்திறந்து பேசி தன் நாம ஜப தொடர் நிகழ்ச்சிக்கு இடைவெளி இடமாட்டாள். பரம வேதாந்தி!சரி கொஞ்ச நேரம் பாட்டி ரூமிற்கு அகதியாய்போய் உட்காரலாமென்று, கையில் அகப்பட்ட தினசரி, வாராந்தரிகளை அள்ளிக் கொண்டு கிளம்பினேன்.

உள்ளே நுழைந்ததும் பாட்டி தன் ஜபத்துக்கு குந்தகம் விளைவிக்காமல் 'என்ன சமாசாரம்' என்று அபிநயமாய் கேட்டாள்.

''சும்மாதான் உன் கூட கொஞ்சநேரம் இருந்துட்டு போகலாம்னு'' என்றுபடி போட்டிருந்த ஈஸி சேரில் உட்கார்ந்து ஒரு வார இதழை புரட்ட தொடங்கினேன்.அப்பாடாவென்று இருந்தது! நல்ல நிசப்தம்தான் ஆனால் ஸ்ரூதிபோல அறை பூராவிலும் பாட்டியின் நாம ஜபம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.

முதலில் அதை எப்போதும் பாட்டி சொல்லும் ஜபம்தான் என்று நினைத்து காதில் போட்டுக் கொண்டதில் வித்யாசம் தெரியவில்லை. ஆனால் ஜபம் கேட்க கேட்க அதில் ஏதோ ஆறு வித்யாசமிருப்பதுபோல தோன்ற கொஞ்சம் கூர்ந்து காதில் வாங்கினேன்!

திடுக்கிட்டு எழுந்துக்கொண்டேன்!

'என்ன ஆச்சு?' என்று எப்போதும்போல பாட்டி கையால் சைகை காட்டினாலும், அவளுடைய 'ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய் ஜெய் ராம்' என்ற வழக்கமான ஜபம் இப்போது 'ஸ்ரீராம் ஜெயராம் 'ஜெய் ஹோ' ராம், ஸ்ரீராம் ஜெய்ராம்' ஜெய்ஹோ' ராம் என்று தடம் மாறியிருந்தது!

'ஐய்யஹோ' என்று கத்தவேண்டும் போலிருந்தது!

Friday, March 6, 2009

'செல்'லுமிடமெல்லாம் தொலைப்பு''வெளியே போகும்போது மறக்காம 'செல்'லை வீட்டிலேயே வெச்சுட்டு போங்க'' என்று சொல்லும் அளவிற்கு நான் தொலைத்த செல்ஃபோன்களின் எண்ணிக்கை அளவுக்கு மிஞ்சி போய்விட்டது.

நோக்கியா, சாம்சங், எல்.ஜி., சோனி எரிக்ஸன், ரிலையன்ஸ் என்று பாரபட்சமில்லாமல் அத்தனை வகையாறா கம்பெனிகளின் செல் கருவியையும் தலா ஒன்று வீதம் வாங்கி தாரவாத்த பெருமை எனக்குண்டு.

செல் யுகம் தொடக்க காலத்தில் நாலாயிரத்து சொச்ச விலை கொடுத்து நான் வாங்கியிருந்த செல்லை அத்தனை செல்லமாகத்தான் பாதுகாத்தேன். அதற்கென்று அளவெடுத்து தைக்கப்பட்ட ஜாக்கெட் போன்ற உறையில் திணிக்கப்பட்டு, இலவச குடிநீர் தொட்டியில் தொங்கும் எவர்சில்வர் டம்ளர் கட்டுண்டு காணப்படுவதுபோல அதை கழுத்தோடு கட்டிக் கொண்டு திரிவேன். ஒரு மகா சத்திய பத்தினிகூட தன் கழுத்து தாலியை தாமதுண்டு நேரம் ஏதோ ஒரு காரணத்திற்காக பிரியும் வாய்ப்புண்டு. ஆனால் என் கழுத்தோ நானோ செல்லை விட்டு விரிந்த சந்தர்ப்பமே இல்லை எனலாம். குளிப்பறை, கழிப்பறை இத்யாதி இடங்களம் இதில் அடக்கம்.


இப்படித்தான், என் மைச்சினன் பையன் கல்யாணத்தில் கல்யாண சத்திர குளியலறைக்கும் செல்லை விடாமல் கூட்டிப் போனேன். செல் தொங்கிக் கொண்டிருந்த கழுத்து பட்டை நொந்து நூலாகிவிட்டதில் எங்கோ செல் நழுவி போய்விட்டது. காலை கல்யாண டிபன் இழுப்பில் எந்த பிரக்ஞையுமில்லாமல் குளியலறை கம் கழிப்பறையிலிருந்து வெளியே வந்து அவசர அவசரமாக டிரஸ்ஸை செய்துக் கொண்டு முருவலான மசால் தோசை சாப்பிட்டுக் கொண்டிருந்த மயக்கத்தில் செல் ஞாபகம் விட்டுப் போயிருந்தது.

ஒரு ஏப்பம் வெளிப்பட்டபோதுதான், டிபன் திணிப்பால் நிறைந்த தொப்பை சற்றே விரிந்து எப்போதும் இப்பட சமயங்களில் தட்டுப்படும் கழுத்திலிருந்து தொங்கும் கருவி காணப்படாததை உணர்த்தியது.

காபியை பாதி கிளாஸ் குடித்துவிட்டு பதைப்போடு எழுந்துக் கொண்டேன். எங்கே தொலைத்தேன் என்று தெரியாமல் படுத்து எழுந்ததிலிருந்து போய் வந்த அத்தனை இடத்திலேயும் தேடி பார்த்தாயிற்று. எல்லோரிடமும் விசாரணை செய்தாயிற்று. நாலாயிரத்து சொச்ச 'செல்' அம்பேல். என் மனைவியின் கடுமையான அனல் கக்கும் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் இங்கும் அங்கமாய் 'எங்கே தேடுவேன் உன்னை எங்கே தேடுவேன்' என்று நான் அலைந்துக் கொண்டிருந்தேன்.

அப்போது என் மச்சினன்தான் ஒரு யுக்தியை முன் மொழிந்தான்.

''அத்திம்பேர் கல்யாணத்திற்கு எத்தனையோ நல்லவா கெட்டவா வர்றா... நாமதான் ஜாக்கிரதையா இருக்கணும். யார் எடுத்தான்னு சந்தேகப்படமுடியும் சொல்லுங்கோ... அதுக்கு ஒரு டெக்னிக் இருக்கு... உங்க நம்பரை என் செல்லுலே போடறேன் உங்க ரிங்டோன் எங்கிருந்து வருதோ, அவாகிட்டே இருக்கிறது தெரிஞ்சுடும்... பையிலே, பெட்டியிலேயோ வைச்சிருந்தாலும் காட்டிக் கொடுத்துடும்'' என்றான்

செல் வந்த ஆதிகாலங்களில் தொலைந்த செல்லை தேடும் இதுபோன்ற யுக்தி புதுமையாகத்தான் இருந்தது.

உடனே என் நம்பரை மச்சினன் தன் செல்லில் போட அம்மாம் பெரிய கல்யாண மண்டபத்திலிருந்த பத்து அறைகள், ஹால், ஸ்டோர் ரூம், சமையல் கூடம், ஆபீஸ் ரூம் என்று ஒன்றையும் விடாமல் என் உறவுக்கார இளைய தலைமுறை அத்தனையும் 'ரிங்டோன்' எங்கே கேட்கிறதென்று, பாம் வைத்த இடத்தை பரப்பரப்பாக தேடும் நாய் ஸ்க்வார்ட் கணக்காய் நாலா புறமும் செவியை தீட்டிக் கொண்டு தேட ஆரம்பித்தாயிற்று.


இந்த பரபரப்பில் கல்யாண மண்டபத்து வேலைக்காரி பீதியுடன் ஓடிவந்தான்.

''ஐயையோ... பத்து பாத்திரம் தேய்ச்சுகினு இருக்கச் சொல்ல பூமிக்கடிலேயிருந்து எவனோ ஒரு பேமானி 'வாடி என் கெப்பகிழங்கே'ன்னு பாடறாங்க... ஓடியாங்க புடுச்சி நாலு சாத்து சாத்தலாம்'' என்று அலறினாள்.

எல்லோரும் 'செல்'லை மறந்தவர்களாய் வேலைக்காரி சொன்ன அதிசயத்தை காண அவள் பின்னே சென்றனர். அவள் குந்தி பத்து பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த இடம் செப்டிக் டாங்கின் மேல் தளம். அதற்குள் ஒலித்த 'பேமானி'யின் பாட்டு என் செல்லின் ரிங்டோம்தான் என்பதெல்லாம் அவர்களுக்கு அப்புறம் புரிந்துவிட்ட சமாசாரங்கள்.

என் கழுத்திலிருந்து நழுவி ஈரோப்பியன் கிளாஸட் வழியே செப்டிங் டாங்கில் மூழ்கியும் என் செல் தன் கடமையை மறக்காமல் செய்துக் கொண்டிருந்தாலும், அதை திரும்பவும் சக்தியிலிருந்து எடுக்க மெனகிட முடியாமல் அதற்கு அங்கேயே இறுதி அஞ்சலி செய்துவிட்டு வந்தேன்.

அந்த 'செல்' விட்ட சாபமோ என்னமோ, அடுத்தடுத்து வாங்கிய செல்கள் ஒவ்வொன்றாக தொலைந்துக் கொண்டே வந்தன.

இப்போது வைத்திருப்பது என் பையன் யூ.எஸ்ஸிலிருந்து கிட்டத்தட்ட ஐம்பது டாலர் கொடுத்து வாங்கி தந்த வஸ்து! இதை வீட்டில் உபயோகிக்க மட்டுமே எனக்கு உரிமை. வெளியே செல்வதென்றால் மறக்காமல் வைத்துவிட்டுதான் போகவேண்டும்.

வெளியிலே கடைக்கு கடை தொங்கும் ஒரு ரூபாய் தொலைபேசி பெட்டியில் அவ்வப்போது என் செல் நம்பரை போட்டு பேசினால், அதை எடுக்கும் என் மனைவி என் செல்லில் யார் யார் கூப்பிட்டார்கள் என்று சொல்வாள். நான் அவர்களுக்கெல்லாம் வீட்டிற்கு திரும்பியோ, அவசரமென்றால் வெளியே 'பூத்'திலோ பேசி விடுக்கிறேன்.

செல் தொலைப்பிற்கு இது ஒரு மாற்றாகத்தான் உள்ளது. நீங்களும் முயற்சி செய்யலாம்.

''யோவ்! மொபைல் போன்னா என்னய்யா அர்த்தம்?'' என்று கேட்பீர்கலானால், கை பேசியை தொலைத்துக் கொண்டே இருங்கள் உங்கள் இஷ்டம் அது!

Tuesday, February 24, 2009

புக்ஃபேர்வழிகள்புக்ஃபேர் செல்லும் அத்தனை பேர்வழிகளும் மெய்யாலுமே புத்தக பைத்தியவங்களா, பேருக்காவது ஆளுக்கொரு புத்தகம் வாங்குகிறார்களா என்று சர்வே செய்ததில் (வெட்டியாக இப்படி சர்வே செய்ய சென்று என்னையும் சேர்த்து) பலதரப்பட்ட புத்தகபுழுத்தோல் போர்த்திய வெத்துவேட்டு பேர்வழிகளை இனம் காண முடிந்தது. அப்பேற்பட்ட புக்ஃபேர்வழிகளில் சிலர்:-

கணக்கு சபாபதி:-

இவர் என்னவோ அசல் அக்மார்க் புத்தகபித்தர்தான், என்றாலும் 'எதை எடுத்தாலும் எட்டு ரூபாய்' வகை புத்தகத்தையும் காசு கொடுத்து வாங்காத மகாகணக்கர். கண்காட்சிகள் இருபது ரூபாய் 

கொடுத்து மூக்கால் அழுதுக்கொண்டு டிக்கட் வாங்கிக் கொண்டு போனாரானால்,

 தன்னுடைய அபிமான எழுத்தாளரின் லேட்டஸ்ட் வெளியீட்டை அது விற்கப்படும் ஸ்டாலின் ஒரு ஈசான 

மூளையில் நின்று கணிசமான நேரத்தில் படித்து முடித்தே விடுவார்.

அப்படி பாரதி பதிப்பக ஸ்டால்காரர் இவர் அதிக நேரம் நிற்பதை சந்தேகப்பட்டுவிடும் பட்சத்தில் சாரதி ஸ்டாலுக்குள் நுழைந்து அதே புத்தகத்தை எடுத்து பக்கத்திலிருந்து தொடரும் சாமர்த்தியசாளி.

இன்னிக்கு இருபது ரூபாய்க்கு அறுநூறு ரூபாய் புத்தகத்தை படித்தேனாக்கும் என்று பெருமைப்பட்டுக்கொள்வார்.  கொசுறாக, இதே டெக்னிக்கில்தான், தெலுங்கு, மலையாளம், கன்னடம் இத்யாகி முப்பது நாட்கள் புத்தகங்களை சில வருடங்களாக கண்காட்சி நாட்களில் பாதி கற்றுக் கொண்டிருக்கிறார்.


சந்திரபோஸ்:-

சந்திரபோஸ் கண்காட்சி தொடக்க நாளில் மட்டும் ஆஜர் ஆகிய பேர்வழி. எந்த புத்தகம் எந்த ஸ்டாலில் கிடைக்கும் என்பதைப் பற்றியெல்லாம் இவருக்கு தெரிய நியாயமில்லை.

ஆனால் அன்றைய தினம் ஏதாவதொரு நாலாம் தர டி.வி. சேனல் செய்தியில் ''நான் வருஷா வருஷம் புத்தக கண்காட்சியை 

ஆவலாக எதிர்ப்பார்ப்பேன். புத்தக ஆர்வலர்களுக்கு இது ஒரு வரபிரசாதம்'' என்ற ரீதியில் போஸ் கொடுத்து இவர் பேட்டி அளிப்பதை பார்க்கலாம்.

இதற்காக இவர் கண்காட்சியில் புத்தகத்தையெல்லாம் தேடும் வீண்வேலை செய்யாமல் தனக்கு படிகிற ஏதாவதொரு டி.வி. சேனல் பேட்டியாளரை தேடி அவரை தக்க வழியில் கவனித்து ரொம்ப காஸ்ட்லியாக மெனக்கெடுவார்.

''நேத்து 'சேச்சே' டி.வி.யிலே புக்ஃபேர் ஃபங்ஷன்லே உங்களை காட்டினானே... என்னென்ன புத்தகம் வாங்கினீங்க?'' என்று இவரை யாராவது கேட்கத்தான் செய்வார்கள்.

''ஹி! ஹி! ஒரு ஃபெரிஞ்ச் ஆர்தர் புக்கை தேடித்தான் போனேன். இன்னும் அந்த லெவல் புத்தகம் விக்கற அளவுக்கு புக்ஃபேர் வளரலே'' 

என்று அவர்கள் மறுகேள்வி கேட்கவிடாமல் செய்து விடுவார்.

குடந்தை குப்புசாமி:-

''ஸார்! குடந்தை குப்புசாமி எழுதின புத்தகம் இருக்கா?'' என்று ஒவ்வொரு ஸ்டாலாக ஏறி கேட்பதே இவருடைய வேலையாக கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்கின்றது.

''யோவ் யார்யா அந்த குடந்தை குப்புசாமி'' என்று விரட்டாத குறையாக இவரை ஸ்டால்காரர்கள் நோகடித்தாலும் தான்தான் அந்த குடந்தை குப்புசாமி என்பதை குடத்தில் வைத்த விளக்காய் இவர் காப்பாற்றி கொண்டிருக்கிறார்.

முட்டி மோதி மூன்றாண்டுகளுக்குமுன் கோதை நாயகி பப்ளிஷரில் உபயத்தில் தன் கதை தொகுப்பான 'சாம்பார் வடை'யை எப்படியோ புத்தகமாக பார்த்துவிட்டார். மேற்படி புத்தகம் வருடம்தோறும் எத்தனை விலை போகிறதென்று பார்க்க மட்டுமே புத்தக கண்காட்சிக்கு குப்புசாமி வருவது வாடிக்கையாகிவிட்டது.

இதில் வேடிக்கை என்னவென்றால் புத்தகம் அச்சான அந்த வருடம் இவரிடம் யாரோ கோதை நாயகி ஸ்டாலில் சாம்பார் வடை அமோக விற்பனையாகிறதென்று காதில் தேனூற்ற இவர் கண்காட்சிக்கு ஓடோடி சென்று கோதை நாயகி பிரசுர ஸ்டாலை தேடியபோது அங்கே அதே பெயரில் கோதை நாயகி கேன்டின் இருக்க, படுபாவிகள் சூடான வடையிலிருந்து எண்ணெய்யை ஒத்தி எடுக்க கிழித்துக் கொண்டிருந்தது 'சாம்பார் வடை' புத்தக பக்கங்களைதான்.

இருந்தாலும் வருடா வருடம் இவர் விசாரணை ஓயாமல் தொடர்கிறது.

விலாசம் மாமி:-

விசாலம் மாமியை விலாசம் மாமி என்பதில் பிழைக்காண வேண்டாம்.

மாமி ஒவ்வொரு வருடமும் புக்ஃபேருக்கு வந்து ஒரு பிக்ஷாப்பர் நிறைய அள்ளிக்கொண்டு செல்லும் சமாசாரம் புத்தகங்களாகத்தான் இருக்க வேண்டுமென நீங்கள் நினைத்தால் அது பிசகு.

எந்த ஸ்டாலின் உள்ளேயும் மாமி போயறியாள். ஸ்டாலின் முகப்பிலேயே டேபிள் சேர் போட்டு உட்கார்ந்திருக்கும் ஆசாமிகளிடம் அந்தந்த பிரசுரகாரர்களின் புத்தக பட்டியல் அடங்கிய லீஃப் லெட்களை சேகரித்துதான் பிக் ஷாப்பரை நிரப்புவாள் மாமி.

சுமார் ஐந்து வருடகாலமாக நான் தொகுத்திருக்கும் பயனுள்ள பாட்டி வைத்திய குறிப்புகளை எந்த பப்ளிஷராவது போட்டுத் தொலைப்பானா என்ற ஏக்கத்தில், பதிப்பாளர்களில் விலாசத்தை சேகரிப்பதே மாமியின் புத்தக கண்காட்சி வருகையின் நோக்கம்.  இதுவரை எந்த பதிப்பாளரும் மசிவதாக தெரியவில்லை.  'பதிப்பாளர்களின் விலாசங்களும், அவர்களின் விசால மனதும்' என்ற தலைப்பில் புத்தகம் போட முயற்சிக்க மாமியிடம் யாராவது சொல்லி பார்த்தால் தேவலாம்.

'பரிசு'த்தநாதன்:-

மாமியாவது ஸ்டால் வரை செல்வார். நம் பரிசுத்தநாதன் டிக்கெட் வாங்கிய அடுத்த க்ஷணமே விருட்டென்று டிக்கெட்டின் கவுண்டர் ஃபாயிலை கிழித்து தன் விலாசம் இத்யாதிகளை எழுதி வைத்திருக்கும் பெட்டியில் போட்டுவிட்டு சட்டென்று வெளியேறிவிடுவார்.

பரிசுபெற்ற நாவலையோ, அதை படிக்கும் ஆவலையோ அறியாத பரிசுத்தநாதனுக்கு ஒருமுறை குலுக்கலில் இரண்டாயிரம் பெறுமான புத்தகம் பரிசாக விழுந்துவிட்டது. அதை அப்படியே ஐம்பது பர்சன்ட் டிஸ்கவுண்டில் ஒரு புத்தக பைத்தியத்திடம் விற்று ருசி கண்டுவிட்டதில், வருஷா வருஷம் ஏன் விழக்கூடாது

 என்ற நம்பிக்கையோடு டிக்கெட் வாங்க மட்டும் வரும் பேர்வழி இவர்.

அறுசுவை அருணாசலம்:-

டிஸம்பர் சீசன் முடிந்த வாயோடு அல்லது கையோடு ஜனவரி சீசனில் அருணாசலம் நாடுவது புத்தக கண்காட்சியின் கான்டீனையே! ஷுகர், பிரஷர் என்று வீட்டில் ஏகப்பட்ட கெடிபிடிகளிலிருந்து தப்பித்து இங்கு ஒரு  பிடிபிடித்துவிட்டு போகவே தினம்தோறும் வருபவர்.


''பாவம் எங்காத்துகாரருக்கு புத்தகம்னா ஒரே பித்து'' என்று எங்காத்துகாரரும் கச்சேரி போகிறார் ரீதியில் மனையாள் பெருமைபட்டாலும் ''தினமும் புக் எக்ஸிபிஷன் போறீங்களே... பேருக்காவது ஒரு புத்தகத்தை வாங்கிட்டு வந்த மாதிரி தெரியலையே அங்கே போய் என்னத்தைதான் செய்வீங்களோ'' என்று சந்தேகப்படாமலும் இல்லைதான்.

இப்படிப்பட்ட புக்ஃபேர்வழிகள் பல தினுசிலும் கண்காட்சியில் திரிவது அந்த அம்மையாருக்கு தெரிய நியாயமில்லை.


ஒரு M.L.A டிக்கெட்உன்னைத்தான்.. எம்.எல்.ஏ டிக்கெட் வாங்கிட்டு வந்திருக்கேன்னு சொல்றேன்.. பேசாம இருந்தா எப்படி ?

ஹூம்...
அப்படின்னா உனக்கு சந்தோஷம் இல்லையா ?


என்ன பெரிய சந்தோஷம் வேண்டியிருக்கு.. சம்பாதிச்ச காசையெல்லாம் இப்படியே அழிக்கப் போறீங்க..

கவலைப்படாதே.. தனியா இல்லே கூட்டணிதான்.

கூட்டணியா ? யார் யாரோட ?

'சே.ப.க' வோட

ரொம்ப அழகுதான், சுத்த தகராறு செய்ற பார்ட்டியோட கூட்டாக்கும் ? உருப்படாப்பலதான்.

பயப்படாதே.. அதனாலதான் இ.தி.க வையும் சேர்த்திருக்கு. சே.ப.க வை சமாளிச்சுடலாம்.

எப்படி பிரிக்கப் போறீங்க ?

செலவை சமமா பிரிச்சுக்கிறதாலே, எதுவானாலும் சமாமாதான் பங்கு.

எனாமோ சோம்பேறிக் கூட்டமெல்லாம் ஒண்ணா சேர்ந்து கூத்தடிக்கறீங்க.
உழைக்காம நாலு காசு பார்க்கலாம்னுதான். எப்ப ரிசல்ட்'டாம் ?

முன்ன மாதிரி இல்ல, இப்ப எல்லாம் ஒரு நாள்ல தெரிஞ்சுடும். அடுத்தமாசாம் 10ம் தேதி முடிவா தெரிஞ்சுடும்.

இதை ஒரு தொழிலாவே பண்ணறீங்க.. கஷ்டம். பாவம் ஏழை ஜனங்க.


பின்னே லட்சம், கோடின்னு வேற எதிலே சுலபமா சம்பாதிக்க முடியுமாம், சொல்லேன்.

கிழிஞ்சுது முடிவு தெரியற வரைக்கும் எல்லாம் ஒத்துமையா இருப்பீங்க, அப்புறம் எல்லாம் புஸ்ஸுன்னு போயிடும்.


'நீ வாய வைச்சுத் தொலைக்காதே. ஆயிரம் சாமியை வேண்டிட்டு நான், சேத்துப்பட்டு ப.கணபதி, இந்திராநகர் தி.கருப்புசாமி மூணு பேரும் கூட்டணியா சேர்ந்து மகாநதி லாட்டரி ஏஜென்ஸி டிக்கெட் வாங்கியிருக்கோம். மே எட்டாம் தேதி குலுக்கல். அதிருஷ்டம் அடிச்சா ஒரு கோடியே ஐம்பது லட்சம் குலுக்கல். மூணு பேரும் சமமா பிரிச்சிட்டா கூட லட்சக்கணக்கிலே தேறும். விழுந்தா இதைச் செய்யலாம் இப்பவே ஒரு ஐடியா பண்ணி பேசிக்கதிலே என்ன தப்பு? தொடர்ந்து வெறியோட வாங்கிட்டேயிருக்கேன். எப்பயாவது 'லக்' அடிக்காமலா போயிடும், பார்ப்போம்.


'களி'காலம்

களிதான் நடராஜமூர்த்தியை களிப்படைய செய்யும் படையல் என்பதை யார் சொன்னார்களென்பது சிதம்பர ரகசியம். திருவாதிரை திருநாளன்று இந்த களிக்காக ஆனந்த நடனம் புரியும் நடராஜ மூர்த்தி, என் மனைவி வெந்தும் வேகாததுமான ஒரு வஸ்துவை வெங்கலப்பானை நிறைய பண்ணி வைத்து களி என்று, நைவேத்யம் செய்தபோது ருத்ரமூர்த்தியாய் தாண்டவத்தை மாற்றிவிடுவாரோ என்ற கிலி எனக்கு உண்டாகிவிட்டது.நல்ல வேளையாக இந்த திருவாதிரை நோம்பில் சிவகாமிகளுக்கே முன்னுரிமையானதால், என் மனைவி அகிலாவும் பெண் பீரிதுவும் வாழையிலையில் வைத்துக் கொண்டு களி எனும் பண்டத்தை வழித்துப் போட்டுக் கொண்டிருந்தார்கள்.''ரொம்ப நல்லா வந்திருக்கில்லே'' என்று அகிலா எப்போதும் போல தன் புத்ரியிடம் கேட்டு, வலுகட்டாயமான ஒரு ஒப்புதல் கம் பாராட்டை பெற முனைந்தபோது, என் பெண் வாயில் போட்ட மிளகளவு களியை விழுங்கவும் முடியாமல், துப்பவும் முடியாம் மிரண்டபடி என்னை ஒரு பார்வையால் எச்சரித்தாள்.


அப்போதே எனக்கு களியின் லட்சணம் எப்படி இருக்குமென்று புரிந்துவிட்டிருந்தது. இருந்தாலும் இன்றைய தினம் இந்த களியால் இம்சை உண்டு என்ற ராசிபலன் எந்த ஜோஸியரும் சொல்லாமலேயே எனக்கு தெரிந்துவிட்டது.


அன்றைய சமையல் மெனுவே அந்த அதிகாலையில் செய்யப்பட்ட களியும் ஏழுதான் கூட்டும் என்றாகிவிட்டதில், வயிற்றை நிரப்ப களியல்லால் வேறு கதியில்லை என்றாகிவிட்டது.களியின் ருசி என்பது கலியாணமானதிலிருந்து எனக்கு மறந்துபோன உணர்வானது. கடந்த முப்பது வருட காலமாக அகிலா தயாரிக்கும் களியாகப்பட்டதில் நான் காணும் குறைகளுக்காக அவள் அரிசி, வெல்லாம், என அப்பாவி மளிகைகள் மேல் பழி போடுவது வழக்கமாகிவிட்டது.


இப்படி ஒவ்வொரு வருடமும் ஏதோ ஒரு சாக்கு சொல்லியே ஓட்டிவிட்டதால், இந்த முறை சற்று மாறுதலாக ''ஆல் இண்டியா லெவல்லே லாரி ஸ்ட்ரைக்காமே... நேந்து வந்த காஸ் சிலிண்டர்லே ஏதாவது கலப்படம் பண்ணிட்டானோ என்னவோ,'' அதனாலே கொஞ்சம் வேக்காடு கம்மியா போச்சு'' என்று அபாண்டமாக பழியை போட்டு இவள் தப்பித்தாலும், இந்த பண்ணதை சாப்பிடுவதிலிருந்து என்னால் தப்பிக்க முடியவில்லை.களிக்கு சைட்டிஷ்ஷாக ஏழுதான் கூட்டை கூட்டணி சேர்த்துவிட்ட மகானுபாவருக்கு என் மனமார்ந்த நன்றியை சொல்லியபடி, கூட்டின் ஒத்தாசையோடு ஒரு பிடி களியை உள்ளே தள்ளி என்று உண்டியை பூர்த்தி செய்துக் கொண்டேன். இந்த ஒரு பிடியால் மேற்படி களியின் அளவு சற்றும் குறையாத நிலை.


ஒரு உருண்டை களி உண்ட களைப்பிலேயே பகலில் தூங்கிக் கொண்டிருந்தவனை அகிலா உலுக்கி எழுப்பினாள்.
''இதோ பாருங்கோ... வர புதன்கிழமை பொங்கல் நீங்க எப்போ உங்க அக்காக்களுக்கு பொங்கல் சீர் தர போகப்போறீங்க இன்னிக்கே போய் அந்த வேலையை முடிச்சுட்டு வாங்க'' என்றாள்.
ஏதேது நாத்தனார்கள். சமாசாரத்தில் இவளுக்கு இத்தனை கரிசனம் பொங்குகிறதென்று லேசாக நான் சந்தேகித்தது சரிதான் என்று புரிந்தது. உடனே எழுந்து புறப்பட தயாரான என்னிடம் இரட்டை சம்படங்களை இவள் கொடுத்தாள்.''வெறும் கையோட அவா வீட்டுக்கு போகாதீங்க. இதிலே களி வைச்சிருக்கேன்'' என்று அவள் கொடுத்த சம்படங்களின் எடை தலா ரெண்டு கிலோ தேறும். அப்போதே களி டிஸ்போஸல் ஆரம்பித்தாகிவிட்டதில் எனக்கு லேசான மகிழ்ச்சியே. அந்த மகிழ்ச்சி என் அக்காக்கள் வீட்டிற்கு போனபோது காணாமல் போனது.


''உன் தம்பி கார்த்திக்கு நீ பண்ணின களியை கொடேன் டேஸ்ட் பாக்கட்டும்'' என்று இரு அத்திம்பேர்களும் என்மேல் காட்டிய அன்பில், அவர்கள் வீட்டிலும் இதே டிஸ்போஸல் பிராப்ளம் என்று தெளிவாயிற்று.எப்போதும் போண்டா, பஜ்ஜி என்று போட்டுக் கொடுக்கும் தமக்கைகள் அன்று பிளேட்டில் கொண்டு வைத்த களி என்னை பார்த்து கேலி செய்தது.
''இந்தடா நான் பண்ணின களியை அகிலாவும் பிரீதுவுக்கும் கொண்டு கொடு'' என்று அக்காக்கள் இருவரும் நான் கொண்டுபோன சம்படத்திலேயே அதைவிட அதிக அளவை அடைத்து அனுப்பி வைத்தனர். வீட்டிற்குள் நுழைந்ததும் அகிலா புலம்ப ஆரம்பித்தாள்.


''இந்த வேலைக்காரி ருக்குமணிக்கு ஆனாலும் திமிரு... கார்த்தாலே சுடசுட சாப்பிடட்டுமேன்று அவகிட்டே அத்தனை களியை கொடுத்தனுப்பினேன்... மதியானம் மூணு மணிக்கு வந்து 'இதோ பாருமா... இந்த மாதிரி பதார்த்தத்தை நீ கொடுக்கலேன்னு யார் அழுதாங்க... எங்கு வூட்டுக்காரர் இதை ஒரு வாய் சாப்பிட்டு பேஜாராய் பூட்டாரு இதோ பாருமே இதை துன்றதுக்கு பதிலா நான் திரும்பவும் திருடிட்டு ஜெயிலுக்கு போய் அவன் போடற களியை துன்னலாம்'னு கோயிச்சிருக்கிறாரு'னு சொல்லி அதை அப்படியே திருப்பி கொடுத்துட்டு போயிட்டா கடங்காரி'' என்றாள்.


ருக்மணி எத்தனை கொடுத்துவைத்தவளென்று பொறாமைபட்டேன்.
ருக்மணி திருப்பிக் கொடுத்ததை ஒரு பாலிதின் பையில் போட்டு குப்பையாக வெளியில் வைத்தாகிவிட்டது. ஆனால் எப்போதும் போல் குப்பை கலெக்ஷனுக்காக சாயங்காலம் வரும் முனிசிபாலிடி சிப்பந்தி அதை மட்டும் சீண்டாமல் அப்படியே விட்டுவிட்டு போயிருந்தான்.எனக்கு கோபமான கோபம். உடனே எங்கள் குடியிருப்பு அஸோசியேஷன் செகரடரியை தொடர்பு கொண்டு இது விஷயமாக புகார் சொன்னேன். செகரடரி உடனே பதிலோடு தயாராய் இருந்தார்.


''ஹலோ ஸார்! நானே உங்களுக்கு போன் செஞ்சி இதைப் பத்தி கேட்கலாம்னு இருந்தேன். உங்க வீட்டுக்கு முன்னாலே இருந்த குப்பையை மக்கும் குப்பையா, மக்காத குப்பையான்னு முனிசிபாலிடிகாரனாலே கிலாசிஃபை பண்ணமுடியலேன்னு கம்ளையண்ட் பண்ணினான்... அதனாலேதான் எடுக்கலையாம்... கொஞ்சம் கிளாரிஃபை பண்ணினேங்கன்னா எடுக்கச் சொல்லலாம்'' என்றார். கொஞ்சம் விட்டால் ஏதாவதொரு லேபரடரியின் சான்றிதழ் கேட்பார் போலிருந்தது.


ஆனால் வீட்டில் கேட்பாரற்று குவிந்திருந்த களியால் என் கோபம் கட்டுக்கடங்காமல் போனது. போதிய தைரியத்தை வரவழித்துக் கொண்டவனாய் அகிலாவிடம் ஒரு அதட்டல் சாயலோடு கேட்டேன்.


''நத் தைர்யத்திலே இத்தனை களியை கிளறினே'' என்றேன். அகிலாவிடம் எந்த கிளர்ச்சியும் காணப்படவில்லை.


''எல்லாம் யுவன் சங்கர் ராஜா கொடுத்த தைரியம்தான்'' என்றாள் நிதானமாக.


''எனதிது சம்பந்தா சம்பந்தமில்லாமல்'' என்றேன்.


''அவர் பழைய பாட்டையெல்லாம் ரீமிக்ஸ் பண்ணி போடறமாதிரி,... நானும் இந்த களியை அப்படியே ஃபிரிட்ஜில் வைச்சுடப்போறேன்... இன்னும் நாலு நாள்லே பொங்கல் வந்துடரது. வீணா திரும்பவும் அரிசி வெல்லம் நெய்யெல்லாம் கொட்டி பொங்கல் வைப்பாளா என்ன? இந்த களியை அப்படியே மேக்கப் பண்ணி ரீமிக்ஸ் பண்ணிட வேண்டியதுதான்'' என்றாள் அலட்சியமாக.கலியும் களியும் முத்தியோய்விட்டதை எண்ணி நான் மூர்ச்சையானேன்!