Monday, November 1, 2010

எந்திரன் ஸ்வீட்!


கறவை கண்ணம்மா செய்யும் கறிவேப்பிலைத் துவையல், மைக்ரோ அவன் மைதிலி போட்டுக் காண்பிக்கும் மல்லி சுக்குக் காப்பி என படுசிம்பிளாக டீ.வி. ‘தடபுடல் சமையல்’ நிகழ்ச்சியை ஒப்பேற்றிக் கொண்டிருந்த தயாரிப்பாளருக்கு தீபாவளி ஸ்பெஷலா டைரக்டர் சங்கரை அணுகலாமே என்ற

எண்ணம் ஏற்பட்டது. உடனே சங்கர் வீட்டுக்கு ஓடினார்.

புரோகிராம் டிஸ்கஷனையே ஈஃபிள் டவர் மேல்தான் பண்ணுவேன் என்று சங்கர் அடம் பிடிக்க, இந்தச் சிறப்பு நிகழ்ச்சிக்கு பசையுள்ள விளம்பரதாரர்கள் கிடைக்காமலா போய் விடுவார்கள் என்ற நப்பாசையோடு இவரும் இசையலானார்.


டைரக்டர் சங்கர்: அப்போ டேட்ஸ் எல்லாம் வாங்கிடுங்க!

தயாரிப்பாளர்: (பேரீச்சம்பழத்தை வைத்து சங்கர் ஸ்பெஷல் ரெசிபியை சொல்ல உத்தே சித்திருப்பார் என்று இவராக உத்தேசித்துக் கொண்டு) ஆஹா! வாங்கிட்டாப் போச்சு... எத்தனை பாக்கெட் தேவைப்படும்?

சங்கர் (கிராஃபிக்ஸ் இல்லாமலே முகம் கடுமையாக): என்ன ஸார் விளையாடறீங்களா? நான் கேட்டது ரஹ்மான் ‘டேட்’டும், வைர முத்து ‘டேட்’டையும்!

தயாரிப்பாளர்: ஸார், நாம சினிமா படம் ஒண்ணும் எடுக்கலையே. எதுக்கு ரஹ்மானும், வைரமுத்துவும்?

சங்கர்: ஓகோ! இந்த அல்ப ஐம்பது கோடி பட்ஜெட்லே என்னை சினிமா படம் வேற எடுக்க வைக்கலாம்ணும் உங்களுக்கு ஆசையிருக்கு போலிருக்கு.

தயாரிப்பாளர்: ஐயையோ ஐம்பது கோடி ஆகுமா? அத்தனை எதுக்கு?

சங்கர்: என்ன ஸார் வாயைப் பொளக்கறீங்க? நிகழ்ச்சியோட முதல் ஷாட்லேயே ஆயிரம் லாரிங்க அணிவகுத்து போற மாதிரி காட்டப் போறோம். தடபுடலா அதை ஆரம்பிக்க அமர்க்களமா ஒரு பி.ஜி.எம்.எஃபெக்ட் கொடுத்தாகணும். அதுக்கு ரஹ்மான் ‘சுவிஸ்’ போய் கம்போஸ் பண்றாரோ, சிட்னி போய் ரெகார்ட் பண்ணுவாரோ யார் கண்டது?


தயாரிப்பாளர்: ஸார்! நாம் தயாரிக்கப் போறது சாதாரண சமையல் நிகழ்ச்சிதான். அதுக்கு இத்தனை ஸ்பெஷல் டிரீட்மெண்ட்டெல்லாம் தாங்குமா?

சங்கர் (கோபமாக எழுந்து): இதுக்குத்தான் நான் சின்ன பட்ஜெட் ஆசாமிங்களை அண்டவே விடறதில்லே.

தயாரிப்பாளர் (வெலவெலத்துப் போய்..): ஸார் கோவிச்சுக்காதீங்க. நான் ஒரு மடையன். இப்பத்தான் புரியுது. நீங்க செஞ்சு காட்டப் போற ஸ்வீட்டுக்குத் தேவையான கோதுமை மாவு, சர்க்கரை, நெய், முந்திரி எல்லாத்தையும் எல்லா நிகழ்ச்சிகளைப் போல கிண்ணத்திலே வெச்சுக் காட்டாம அதையெல்லாம் லாரி லாரியா வந்து இறங்கற மாதிரி பிரம்மாண்டமா காட்டிட்டு அப்பால ஸ்டூடியோ உள்ளே வந்து ஸ்டவ் கடாய் முன்னாலே நீங்க க்ளோசப்பிலே வருவீங்க... சரிதானே!

சங்கர்: நாசமாப் போச்சு! நிகழ்ச்சிக்கு நீங்க டைரக்டரா? நானா? உங்க ஸ்டூடியோவுக்குள்ளே அத்தனை சிம்பிளாவா இதைச் செய்ய முடியும்? ஒரு பிரம்மாண்டமான ஃபேக்டரியிலேதான் இந்த ரெஸிபி தயாரிப்பைக் காட்டியாகணும். பெரிய பெரிய ‘ஃபர்னஸ்’ அடுப்புல. சுமார் ஆயிரக்கணக்கான டிகிரியிலேதான் ‘குக்’ பண்ணப் போறோம். தயாரிச்சு முடிச்சதும் அதை கன்வேயர் பெல்ட் மூலமா கொண்டு, மலை மலையா குவிக்கற மாதிரி காட்டறோம். அது குதிச்சு நகரும் சுட்சிவேஷனுக்குத்தான் வைரமுத்து ஸாரை ‘லிரிக்’ போடச் சொல்லணும்னு இருக்கேன்.

தயாரிப்பாளர்: ஐயையோ... ஒரு அல்ப தீபாவளி ஸ்வீட் தயாரிப்பைக் காட்ட எதுக்கு இதெல்லாம்?

சங்கர்: நான் பண்ணிக் காட்டப் போறது அல்பமான ஸ்வீட்டா? இது எந்திரன் ஸ்பெஷல் ஸ்வீட். லாரியிலே அதுக்காக தாதுப் பொருள்களை ஏத்திட்டு வர்றதிலேர்ந்து ஆரம்பிச்சு, ஜெர்மனிக்கெல்லாம் போகாட்டாலும் பிலாய், ரூர்கேலான்னு நம்ப நாட்டிலேயாவது ஒரு ஃபேக்டரிக்கு போய்த் தான் ‘எந்திரன் ஸ்வீட்’டை உருக்கி எடுக்கறாப் போல ‘லைவ்’வா காட்டியாகணும்!

தயாரிப்பாளர்: என்ன உருக்கி எடுக்கப் போறோமா? இது என்ன இரும்புக் கம்பியா? தீபாவளி ஸ்வீட் ஸார்.

சங்கர்: எனக்கு நீங்க சொல்லித் தர்றீங்களா... இது தீபாவளி ஸ்வீட்தான். ஆனா எந்திரன் சாப்பிடற ஸ்வீட்டாச்சே! இரும்புத் தாதுவை உருக்கி, கம்பி கம்பியா முறுக்கி செய்யாமே எப்படிச் செய்றதாம்!

ஈஃபிள் டவரிலிருந்து மயங்கி விழாமல் எப்படியோ சமாளித்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிவந்தார் தயாரிப்பாளர்.

இயக்குநர் சங்கர் செய்யப் போகும் நிகழ்ச்சி என்று தடபுடலாக அறிவித்து விட்டதால், சங்கர் என்ற பெயரில் ஏதோ ஒரு அரசாங்கத் துறையில் இயக்குநராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஆசாமியைத் தேடிப் பிடித்து சமாளித்தாக வேண்டுமே என்று அடுத்த ஓட்டம் பிடித்தார்.

அகிலா கார்த்திகேயன்