Tuesday, February 24, 2009

புக்ஃபேர்வழிகள்



புக்ஃபேர் செல்லும் அத்தனை பேர்வழிகளும் மெய்யாலுமே புத்தக பைத்தியவங்களா, பேருக்காவது ஆளுக்கொரு புத்தகம் வாங்குகிறார்களா என்று சர்வே செய்ததில் (வெட்டியாக இப்படி சர்வே செய்ய சென்று என்னையும் சேர்த்து) பலதரப்பட்ட புத்தகபுழுத்தோல் போர்த்திய வெத்துவேட்டு பேர்வழிகளை இனம் காண முடிந்தது. அப்பேற்பட்ட புக்ஃபேர்வழிகளில் சிலர்:-

கணக்கு சபாபதி:-

இவர் என்னவோ அசல் அக்மார்க் புத்தகபித்தர்தான், என்றாலும் 'எதை எடுத்தாலும் எட்டு ரூபாய்' வகை புத்தகத்தையும் காசு கொடுத்து வாங்காத மகாகணக்கர். கண்காட்சிகள் இருபது ரூபாய் 

கொடுத்து மூக்கால் அழுதுக்கொண்டு டிக்கட் வாங்கிக் கொண்டு போனாரானால்,

 தன்னுடைய அபிமான எழுத்தாளரின் லேட்டஸ்ட் வெளியீட்டை அது விற்கப்படும் ஸ்டாலின் ஒரு ஈசான 

மூளையில் நின்று கணிசமான நேரத்தில் படித்து முடித்தே விடுவார்.

அப்படி பாரதி பதிப்பக ஸ்டால்காரர் இவர் அதிக நேரம் நிற்பதை சந்தேகப்பட்டுவிடும் பட்சத்தில் சாரதி ஸ்டாலுக்குள் நுழைந்து அதே புத்தகத்தை எடுத்து பக்கத்திலிருந்து தொடரும் சாமர்த்தியசாளி.

இன்னிக்கு இருபது ரூபாய்க்கு அறுநூறு ரூபாய் புத்தகத்தை படித்தேனாக்கும் என்று பெருமைப்பட்டுக்கொள்வார்.  கொசுறாக, இதே டெக்னிக்கில்தான், தெலுங்கு, மலையாளம், கன்னடம் இத்யாகி முப்பது நாட்கள் புத்தகங்களை சில வருடங்களாக கண்காட்சி நாட்களில் பாதி கற்றுக் கொண்டிருக்கிறார்.


சந்திரபோஸ்:-

சந்திரபோஸ் கண்காட்சி தொடக்க நாளில் மட்டும் ஆஜர் ஆகிய பேர்வழி. எந்த புத்தகம் எந்த ஸ்டாலில் கிடைக்கும் என்பதைப் பற்றியெல்லாம் இவருக்கு தெரிய நியாயமில்லை.

ஆனால் அன்றைய தினம் ஏதாவதொரு நாலாம் தர டி.வி. சேனல் செய்தியில் ''நான் வருஷா வருஷம் புத்தக கண்காட்சியை 

ஆவலாக எதிர்ப்பார்ப்பேன். புத்தக ஆர்வலர்களுக்கு இது ஒரு வரபிரசாதம்'' என்ற ரீதியில் போஸ் கொடுத்து இவர் பேட்டி அளிப்பதை பார்க்கலாம்.

இதற்காக இவர் கண்காட்சியில் புத்தகத்தையெல்லாம் தேடும் வீண்வேலை செய்யாமல் தனக்கு படிகிற ஏதாவதொரு டி.வி. சேனல் பேட்டியாளரை தேடி அவரை தக்க வழியில் கவனித்து ரொம்ப காஸ்ட்லியாக மெனக்கெடுவார்.

''நேத்து 'சேச்சே' டி.வி.யிலே புக்ஃபேர் ஃபங்ஷன்லே உங்களை காட்டினானே... என்னென்ன புத்தகம் வாங்கினீங்க?'' என்று இவரை யாராவது கேட்கத்தான் செய்வார்கள்.

''ஹி! ஹி! ஒரு ஃபெரிஞ்ச் ஆர்தர் புக்கை தேடித்தான் போனேன். இன்னும் அந்த லெவல் புத்தகம் விக்கற அளவுக்கு புக்ஃபேர் வளரலே'' 

என்று அவர்கள் மறுகேள்வி கேட்கவிடாமல் செய்து விடுவார்.

குடந்தை குப்புசாமி:-

''ஸார்! குடந்தை குப்புசாமி எழுதின புத்தகம் இருக்கா?'' என்று ஒவ்வொரு ஸ்டாலாக ஏறி கேட்பதே இவருடைய வேலையாக கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்கின்றது.

''யோவ் யார்யா அந்த குடந்தை குப்புசாமி'' என்று விரட்டாத குறையாக இவரை ஸ்டால்காரர்கள் நோகடித்தாலும் தான்தான் அந்த குடந்தை குப்புசாமி என்பதை குடத்தில் வைத்த விளக்காய் இவர் காப்பாற்றி கொண்டிருக்கிறார்.

முட்டி மோதி மூன்றாண்டுகளுக்குமுன் கோதை நாயகி பப்ளிஷரில் உபயத்தில் தன் கதை தொகுப்பான 'சாம்பார் வடை'யை எப்படியோ புத்தகமாக பார்த்துவிட்டார். மேற்படி புத்தகம் வருடம்தோறும் எத்தனை விலை போகிறதென்று பார்க்க மட்டுமே புத்தக கண்காட்சிக்கு குப்புசாமி வருவது வாடிக்கையாகிவிட்டது.

இதில் வேடிக்கை என்னவென்றால் புத்தகம் அச்சான அந்த வருடம் இவரிடம் யாரோ கோதை நாயகி ஸ்டாலில் சாம்பார் வடை அமோக விற்பனையாகிறதென்று காதில் தேனூற்ற இவர் கண்காட்சிக்கு ஓடோடி சென்று கோதை நாயகி பிரசுர ஸ்டாலை தேடியபோது அங்கே அதே பெயரில் கோதை நாயகி கேன்டின் இருக்க, படுபாவிகள் சூடான வடையிலிருந்து எண்ணெய்யை ஒத்தி எடுக்க கிழித்துக் கொண்டிருந்தது 'சாம்பார் வடை' புத்தக பக்கங்களைதான்.

இருந்தாலும் வருடா வருடம் இவர் விசாரணை ஓயாமல் தொடர்கிறது.

விலாசம் மாமி:-

விசாலம் மாமியை விலாசம் மாமி என்பதில் பிழைக்காண வேண்டாம்.

மாமி ஒவ்வொரு வருடமும் புக்ஃபேருக்கு வந்து ஒரு பிக்ஷாப்பர் நிறைய அள்ளிக்கொண்டு செல்லும் சமாசாரம் புத்தகங்களாகத்தான் இருக்க வேண்டுமென நீங்கள் நினைத்தால் அது பிசகு.

எந்த ஸ்டாலின் உள்ளேயும் மாமி போயறியாள். ஸ்டாலின் முகப்பிலேயே டேபிள் சேர் போட்டு உட்கார்ந்திருக்கும் ஆசாமிகளிடம் அந்தந்த பிரசுரகாரர்களின் புத்தக பட்டியல் அடங்கிய லீஃப் லெட்களை சேகரித்துதான் பிக் ஷாப்பரை நிரப்புவாள் மாமி.

சுமார் ஐந்து வருடகாலமாக நான் தொகுத்திருக்கும் பயனுள்ள பாட்டி வைத்திய குறிப்புகளை எந்த பப்ளிஷராவது போட்டுத் தொலைப்பானா என்ற ஏக்கத்தில், பதிப்பாளர்களில் விலாசத்தை சேகரிப்பதே மாமியின் புத்தக கண்காட்சி வருகையின் நோக்கம்.  இதுவரை எந்த பதிப்பாளரும் மசிவதாக தெரியவில்லை.  'பதிப்பாளர்களின் விலாசங்களும், அவர்களின் விசால மனதும்' என்ற தலைப்பில் புத்தகம் போட முயற்சிக்க மாமியிடம் யாராவது சொல்லி பார்த்தால் தேவலாம்.

'பரிசு'த்தநாதன்:-

மாமியாவது ஸ்டால் வரை செல்வார். நம் பரிசுத்தநாதன் டிக்கெட் வாங்கிய அடுத்த க்ஷணமே விருட்டென்று டிக்கெட்டின் கவுண்டர் ஃபாயிலை கிழித்து தன் விலாசம் இத்யாதிகளை எழுதி வைத்திருக்கும் பெட்டியில் போட்டுவிட்டு சட்டென்று வெளியேறிவிடுவார்.

பரிசுபெற்ற நாவலையோ, அதை படிக்கும் ஆவலையோ அறியாத பரிசுத்தநாதனுக்கு ஒருமுறை குலுக்கலில் இரண்டாயிரம் பெறுமான புத்தகம் பரிசாக விழுந்துவிட்டது. அதை அப்படியே ஐம்பது பர்சன்ட் டிஸ்கவுண்டில் ஒரு புத்தக பைத்தியத்திடம் விற்று ருசி கண்டுவிட்டதில், வருஷா வருஷம் ஏன் விழக்கூடாது

 என்ற நம்பிக்கையோடு டிக்கெட் வாங்க மட்டும் வரும் பேர்வழி இவர்.

அறுசுவை அருணாசலம்:-

டிஸம்பர் சீசன் முடிந்த வாயோடு அல்லது கையோடு ஜனவரி சீசனில் அருணாசலம் நாடுவது புத்தக கண்காட்சியின் கான்டீனையே! ஷுகர், பிரஷர் என்று வீட்டில் ஏகப்பட்ட கெடிபிடிகளிலிருந்து தப்பித்து இங்கு ஒரு  பிடிபிடித்துவிட்டு போகவே தினம்தோறும் வருபவர்.


''பாவம் எங்காத்துகாரருக்கு புத்தகம்னா ஒரே பித்து'' என்று எங்காத்துகாரரும் கச்சேரி போகிறார் ரீதியில் மனையாள் பெருமைபட்டாலும் ''தினமும் புக் எக்ஸிபிஷன் போறீங்களே... பேருக்காவது ஒரு புத்தகத்தை வாங்கிட்டு வந்த மாதிரி தெரியலையே அங்கே போய் என்னத்தைதான் செய்வீங்களோ'' என்று சந்தேகப்படாமலும் இல்லைதான்.

இப்படிப்பட்ட புக்ஃபேர்வழிகள் பல தினுசிலும் கண்காட்சியில் திரிவது அந்த அம்மையாருக்கு தெரிய நியாயமில்லை.


ஒரு M.L.A டிக்கெட்



உன்னைத்தான்.. எம்.எல்.ஏ டிக்கெட் வாங்கிட்டு வந்திருக்கேன்னு சொல்றேன்.. பேசாம இருந்தா எப்படி ?

ஹூம்...
அப்படின்னா உனக்கு சந்தோஷம் இல்லையா ?


என்ன பெரிய சந்தோஷம் வேண்டியிருக்கு.. சம்பாதிச்ச காசையெல்லாம் இப்படியே அழிக்கப் போறீங்க..

கவலைப்படாதே.. தனியா இல்லே கூட்டணிதான்.

கூட்டணியா ? யார் யாரோட ?

'சே.ப.க' வோட

ரொம்ப அழகுதான், சுத்த தகராறு செய்ற பார்ட்டியோட கூட்டாக்கும் ? உருப்படாப்பலதான்.

பயப்படாதே.. அதனாலதான் இ.தி.க வையும் சேர்த்திருக்கு. சே.ப.க வை சமாளிச்சுடலாம்.

எப்படி பிரிக்கப் போறீங்க ?

செலவை சமமா பிரிச்சுக்கிறதாலே, எதுவானாலும் சமாமாதான் பங்கு.

எனாமோ சோம்பேறிக் கூட்டமெல்லாம் ஒண்ணா சேர்ந்து கூத்தடிக்கறீங்க.
உழைக்காம நாலு காசு பார்க்கலாம்னுதான். எப்ப ரிசல்ட்'டாம் ?

முன்ன மாதிரி இல்ல, இப்ப எல்லாம் ஒரு நாள்ல தெரிஞ்சுடும். அடுத்தமாசாம் 10ம் தேதி முடிவா தெரிஞ்சுடும்.

இதை ஒரு தொழிலாவே பண்ணறீங்க.. கஷ்டம். பாவம் ஏழை ஜனங்க.


பின்னே லட்சம், கோடின்னு வேற எதிலே சுலபமா சம்பாதிக்க முடியுமாம், சொல்லேன்.

கிழிஞ்சுது முடிவு தெரியற வரைக்கும் எல்லாம் ஒத்துமையா இருப்பீங்க, அப்புறம் எல்லாம் புஸ்ஸுன்னு போயிடும்.


'நீ வாய வைச்சுத் தொலைக்காதே. ஆயிரம் சாமியை வேண்டிட்டு நான், சேத்துப்பட்டு ப.கணபதி, இந்திராநகர் தி.கருப்புசாமி மூணு பேரும் கூட்டணியா சேர்ந்து மகாநதி லாட்டரி ஏஜென்ஸி டிக்கெட் வாங்கியிருக்கோம். மே எட்டாம் தேதி குலுக்கல். அதிருஷ்டம் அடிச்சா ஒரு கோடியே ஐம்பது லட்சம் குலுக்கல். மூணு பேரும் சமமா பிரிச்சிட்டா கூட லட்சக்கணக்கிலே தேறும். விழுந்தா இதைச் செய்யலாம் இப்பவே ஒரு ஐடியா பண்ணி பேசிக்கதிலே என்ன தப்பு? தொடர்ந்து வெறியோட வாங்கிட்டேயிருக்கேன். எப்பயாவது 'லக்' அடிக்காமலா போயிடும், பார்ப்போம்.


'களி'காலம்

களிதான் நடராஜமூர்த்தியை களிப்படைய செய்யும் படையல் என்பதை யார் சொன்னார்களென்பது சிதம்பர ரகசியம். திருவாதிரை திருநாளன்று இந்த களிக்காக ஆனந்த நடனம் புரியும் நடராஜ மூர்த்தி, என் மனைவி வெந்தும் வேகாததுமான ஒரு வஸ்துவை வெங்கலப்பானை நிறைய பண்ணி வைத்து களி என்று, நைவேத்யம் செய்தபோது ருத்ரமூர்த்தியாய் தாண்டவத்தை மாற்றிவிடுவாரோ என்ற கிலி எனக்கு உண்டாகிவிட்டது.



நல்ல வேளையாக இந்த திருவாதிரை நோம்பில் சிவகாமிகளுக்கே முன்னுரிமையானதால், என் மனைவி அகிலாவும் பெண் பீரிதுவும் வாழையிலையில் வைத்துக் கொண்டு களி எனும் பண்டத்தை வழித்துப் போட்டுக் கொண்டிருந்தார்கள்.



''ரொம்ப நல்லா வந்திருக்கில்லே'' என்று அகிலா எப்போதும் போல தன் புத்ரியிடம் கேட்டு, வலுகட்டாயமான ஒரு ஒப்புதல் கம் பாராட்டை பெற முனைந்தபோது, என் பெண் வாயில் போட்ட மிளகளவு களியை விழுங்கவும் முடியாமல், துப்பவும் முடியாம் மிரண்டபடி என்னை ஒரு பார்வையால் எச்சரித்தாள்.


அப்போதே எனக்கு களியின் லட்சணம் எப்படி இருக்குமென்று புரிந்துவிட்டிருந்தது. இருந்தாலும் இன்றைய தினம் இந்த களியால் இம்சை உண்டு என்ற ராசிபலன் எந்த ஜோஸியரும் சொல்லாமலேயே எனக்கு தெரிந்துவிட்டது.


அன்றைய சமையல் மெனுவே அந்த அதிகாலையில் செய்யப்பட்ட களியும் ஏழுதான் கூட்டும் என்றாகிவிட்டதில், வயிற்றை நிரப்ப களியல்லால் வேறு கதியில்லை என்றாகிவிட்டது.



களியின் ருசி என்பது கலியாணமானதிலிருந்து எனக்கு மறந்துபோன உணர்வானது. கடந்த முப்பது வருட காலமாக அகிலா தயாரிக்கும் களியாகப்பட்டதில் நான் காணும் குறைகளுக்காக அவள் அரிசி, வெல்லாம், என அப்பாவி மளிகைகள் மேல் பழி போடுவது வழக்கமாகிவிட்டது.


இப்படி ஒவ்வொரு வருடமும் ஏதோ ஒரு சாக்கு சொல்லியே ஓட்டிவிட்டதால், இந்த முறை சற்று மாறுதலாக ''ஆல் இண்டியா லெவல்லே லாரி ஸ்ட்ரைக்காமே... நேந்து வந்த காஸ் சிலிண்டர்லே ஏதாவது கலப்படம் பண்ணிட்டானோ என்னவோ,'' அதனாலே கொஞ்சம் வேக்காடு கம்மியா போச்சு'' என்று அபாண்டமாக பழியை போட்டு இவள் தப்பித்தாலும், இந்த பண்ணதை சாப்பிடுவதிலிருந்து என்னால் தப்பிக்க முடியவில்லை.



களிக்கு சைட்டிஷ்ஷாக ஏழுதான் கூட்டை கூட்டணி சேர்த்துவிட்ட மகானுபாவருக்கு என் மனமார்ந்த நன்றியை சொல்லியபடி, கூட்டின் ஒத்தாசையோடு ஒரு பிடி களியை உள்ளே தள்ளி என்று உண்டியை பூர்த்தி செய்துக் கொண்டேன். இந்த ஒரு பிடியால் மேற்படி களியின் அளவு சற்றும் குறையாத நிலை.


ஒரு உருண்டை களி உண்ட களைப்பிலேயே பகலில் தூங்கிக் கொண்டிருந்தவனை அகிலா உலுக்கி எழுப்பினாள்.
''இதோ பாருங்கோ... வர புதன்கிழமை பொங்கல் நீங்க எப்போ உங்க அக்காக்களுக்கு பொங்கல் சீர் தர போகப்போறீங்க இன்னிக்கே போய் அந்த வேலையை முடிச்சுட்டு வாங்க'' என்றாள்.
ஏதேது நாத்தனார்கள். சமாசாரத்தில் இவளுக்கு இத்தனை கரிசனம் பொங்குகிறதென்று லேசாக நான் சந்தேகித்தது சரிதான் என்று புரிந்தது. உடனே எழுந்து புறப்பட தயாரான என்னிடம் இரட்டை சம்படங்களை இவள் கொடுத்தாள்.



''வெறும் கையோட அவா வீட்டுக்கு போகாதீங்க. இதிலே களி வைச்சிருக்கேன்'' என்று அவள் கொடுத்த சம்படங்களின் எடை தலா ரெண்டு கிலோ தேறும். அப்போதே களி டிஸ்போஸல் ஆரம்பித்தாகிவிட்டதில் எனக்கு லேசான மகிழ்ச்சியே. அந்த மகிழ்ச்சி என் அக்காக்கள் வீட்டிற்கு போனபோது காணாமல் போனது.


''உன் தம்பி கார்த்திக்கு நீ பண்ணின களியை கொடேன் டேஸ்ட் பாக்கட்டும்'' என்று இரு அத்திம்பேர்களும் என்மேல் காட்டிய அன்பில், அவர்கள் வீட்டிலும் இதே டிஸ்போஸல் பிராப்ளம் என்று தெளிவாயிற்று.



எப்போதும் போண்டா, பஜ்ஜி என்று போட்டுக் கொடுக்கும் தமக்கைகள் அன்று பிளேட்டில் கொண்டு வைத்த களி என்னை பார்த்து கேலி செய்தது.
''இந்தடா நான் பண்ணின களியை அகிலாவும் பிரீதுவுக்கும் கொண்டு கொடு'' என்று அக்காக்கள் இருவரும் நான் கொண்டுபோன சம்படத்திலேயே அதைவிட அதிக அளவை அடைத்து அனுப்பி வைத்தனர். வீட்டிற்குள் நுழைந்ததும் அகிலா புலம்ப ஆரம்பித்தாள்.


''இந்த வேலைக்காரி ருக்குமணிக்கு ஆனாலும் திமிரு... கார்த்தாலே சுடசுட சாப்பிடட்டுமேன்று அவகிட்டே அத்தனை களியை கொடுத்தனுப்பினேன்... மதியானம் மூணு மணிக்கு வந்து 'இதோ பாருமா... இந்த மாதிரி பதார்த்தத்தை நீ கொடுக்கலேன்னு யார் அழுதாங்க... எங்கு வூட்டுக்காரர் இதை ஒரு வாய் சாப்பிட்டு பேஜாராய் பூட்டாரு இதோ பாருமே இதை துன்றதுக்கு பதிலா நான் திரும்பவும் திருடிட்டு ஜெயிலுக்கு போய் அவன் போடற களியை துன்னலாம்'னு கோயிச்சிருக்கிறாரு'னு சொல்லி அதை அப்படியே திருப்பி கொடுத்துட்டு போயிட்டா கடங்காரி'' என்றாள்.


ருக்மணி எத்தனை கொடுத்துவைத்தவளென்று பொறாமைபட்டேன்.
ருக்மணி திருப்பிக் கொடுத்ததை ஒரு பாலிதின் பையில் போட்டு குப்பையாக வெளியில் வைத்தாகிவிட்டது. ஆனால் எப்போதும் போல் குப்பை கலெக்ஷனுக்காக சாயங்காலம் வரும் முனிசிபாலிடி சிப்பந்தி அதை மட்டும் சீண்டாமல் அப்படியே விட்டுவிட்டு போயிருந்தான்.



எனக்கு கோபமான கோபம். உடனே எங்கள் குடியிருப்பு அஸோசியேஷன் செகரடரியை தொடர்பு கொண்டு இது விஷயமாக புகார் சொன்னேன். செகரடரி உடனே பதிலோடு தயாராய் இருந்தார்.


''ஹலோ ஸார்! நானே உங்களுக்கு போன் செஞ்சி இதைப் பத்தி கேட்கலாம்னு இருந்தேன். உங்க வீட்டுக்கு முன்னாலே இருந்த குப்பையை மக்கும் குப்பையா, மக்காத குப்பையான்னு முனிசிபாலிடிகாரனாலே கிலாசிஃபை பண்ணமுடியலேன்னு கம்ளையண்ட் பண்ணினான்... அதனாலேதான் எடுக்கலையாம்... கொஞ்சம் கிளாரிஃபை பண்ணினேங்கன்னா எடுக்கச் சொல்லலாம்'' என்றார். கொஞ்சம் விட்டால் ஏதாவதொரு லேபரடரியின் சான்றிதழ் கேட்பார் போலிருந்தது.


ஆனால் வீட்டில் கேட்பாரற்று குவிந்திருந்த களியால் என் கோபம் கட்டுக்கடங்காமல் போனது. போதிய தைரியத்தை வரவழித்துக் கொண்டவனாய் அகிலாவிடம் ஒரு அதட்டல் சாயலோடு கேட்டேன்.


''நத் தைர்யத்திலே இத்தனை களியை கிளறினே'' என்றேன். அகிலாவிடம் எந்த கிளர்ச்சியும் காணப்படவில்லை.


''எல்லாம் யுவன் சங்கர் ராஜா கொடுத்த தைரியம்தான்'' என்றாள் நிதானமாக.


''எனதிது சம்பந்தா சம்பந்தமில்லாமல்'' என்றேன்.


''அவர் பழைய பாட்டையெல்லாம் ரீமிக்ஸ் பண்ணி போடறமாதிரி,... நானும் இந்த களியை அப்படியே ஃபிரிட்ஜில் வைச்சுடப்போறேன்... இன்னும் நாலு நாள்லே பொங்கல் வந்துடரது. வீணா திரும்பவும் அரிசி வெல்லம் நெய்யெல்லாம் கொட்டி பொங்கல் வைப்பாளா என்ன? இந்த களியை அப்படியே மேக்கப் பண்ணி ரீமிக்ஸ் பண்ணிட வேண்டியதுதான்'' என்றாள் அலட்சியமாக.



கலியும் களியும் முத்தியோய்விட்டதை எண்ணி நான் மூர்ச்சையானேன்!


அர்ச்சகம் (சிறுகதை)

சரவணனுக்கு இருப்பு கொள்ளவில்லை. எப்படியாவது இந்த கோவிலின் அர்ச்சகர் உத்யோகத்தை, இன்றோடு கைகழுவிவிட்டு ஓடிவிட வேண்டுமென்று, அவன் மனம் துடியாய் துடித்துக் கொண்டிருந்தது. அதற்காகத் தான் பிச்சுமணி ஐயருக்காக, சரவணன் காக்க வேண்டியதாகி விட்டது. அந்த கிழவர் இன்று எப்படியும் வந்தே தீருவாரென்று நம்பினான் சரவணன்."ஐயர் வந்தவுடன் அவர் மனம் உருகுமாறு பொய் சொல்லி நடித்தாக வேண்டும். அப்போது தான் பயப்படாமல் இந்த கோவிலின் சாவியை வாங்கிக் கொள்வார். இரண் டொரு நாட்களில் திரும்பி விடுவதாக சொல்லிவிட்டு ஓட வேண்டியது தான்!' என சரவணனின் மனதில் நிலை கொள்ளாமல் தவிப்பு மேலிட்டது.
கும்பகோணத்திற்கு பத்து கி.மீ., தூரத்தில் அமைந் திருந்தது அந்த ஈஸ்வரன் கோவில். "நீ ரொம்ப கொடுத்து வச்சவண்டா சரவணா! திருஞான சம்பந்தர், அப்பர் எல்லாம் இந்த ஈஸ்வரன் மேலே உருகி பாடியிருக்காங்க... அம்பாளும் சக்தி வாய்ந்தவள்ன்னு கேள்விபட்டிருக்கேன்... நீ போய் சேர்ந்து, ஊரில் எல்லாத்தையும் பழ கிட்டு சொல்லு. நாங்க வந்து பத்து நாள் இருந்துட்டு போறோம்...' என்று, போஸ் டிங் ஆர்டர் வந்தவுடன், இந்த கோவிலைப் பற்றி சிலாகித்து அனுப்பி வைத்தார் சரவணனின் அப்பா.முதன் முதலாக அர்ச்சகர் உத்யோகம் பார்ப்பதில், ஒரு உரிமையை பெற்றுவிட்ட நிறைவில் சரவணனும், ஊரைப் பற் றியோ, கோவிலைப் பற்றியோ அத்தனை சிந்தனை செலுத்தாதவனாய், பெட்டி படுக்கையோடு கும்பகோணத்திற்கு வந்து, அங்கிருந்து டவுன்பஸ் பிடித்து, ஒரு மாலை பொழுதில் ஊரை வந்தடைந்தான். ஊரில் கோவில் மட்டுமே இருந்தது. பேருக்கு இரண்டு, மூன்று தெருக்கள் தான். அதிலும், எண்ணி ஒன்றிரண்டு இந்த கால கட்டடங்கள்; மற்றவை ஓடு வேய்ந்த பழங் கால வீடுகள். சரவணனுக்கு பரிச்சயமில்லாத வகையை சார்ந்தவை. முதலில் இந்த சூழலே சரவணனுக்கு அச்சமும், ஏமாற்றமும் கொடுத்தன. ஆள் அரவ மில்லாத, விசாலமான கோவி லின் பிரகாரத்தை அடைந்து, கோவில் பொறுப்பாளரை விசாரித்தான்."தம்பி! ரொம்ப சந்தோஷம்... உள்ளே பிச்சுமணி ஐயர் இருக்கார்... பெட்டி படுக்கையை ஆபிஸ் ரூமிலேயே வைச்சுட்டு, கை, கால் கழுவிட்டு போய் சாமி தரிசனம் பண்ணுங்க... ஐயர் கிட்டேயிருந்து நாளைக்கு பொறுப்பை வாங்கிட்டு, "ஜாய்ன்' பண்ணிடலாம்... குடியிருக்க ஜாகை கிடைக்கற வரைக்கும், இந்த ஆபீஸ் ரூமிலேயே தங்கிக்கலாம்; ஆட்சேபனையில்லே. ஆனா, பத்து, பதினைஞ்சு நாளுக்கு மேலே தங்க முடியாது."சமைக்கற சாமான் செட் டெல்லாம், தம்பி கொண்டு வரலைன்னு தெரியுது... இந்த கிராமத்திலே ஒரே ஒரு டீக்கடை தான். மத்யானம் மட்டும் நீ சொன்னா சாப்பாடு செஞ்சு தருவாங்க. மத்தபடி டிபன் ஐட்டங்கள் கிடைக்காது...' மடமடவென்று ஊரின் அவலத்தை பொறுப்பாளர் விவரித்தபோது, மிரண்டு போனான் சரவணன் .
மிகவும் வெறுப்போடு தான் ஈஸ்வர் சன்னதிக்குள் நுழைந் தான். பிச்சுமணி ஐயர் மட்டும், ஈஸ்வரருக்கு துணையாக அத்தனை பெரிய சன்னதியில் உட்கார்ந்திருந்தார்.கருவறையின் இருட்டில் அசடு வழிந்த குத்து விளக் கோடு, 40 வாட்ஸ் வெளிச்சத்தில் பிரமாண்டமான சிவலிங்கமாக காட்சி தந்தார் ஈஸ்வரர். ஈஸ்வரருக்கு சுற்ற பதினைந்து முழவேட்டியும் பத்தாதோ என தோன்றியது. சரவணன் வந்ததைப் பார்த்ததும், சுறுசுறுப்பாக எழுந்து வந்தார் பிச்சுமணி ஐயர். "அர்ச்சனை இருக்கா?' என்றார் ஆவலோடு."இல்லே, எனக்கு இந்த கோவில்லே அபாய்ன்ட்மென்ட் ஆயிருக்கு... உங்க கிட்டேயிருந்து பொறுப்பை வாங்கிக் கணும்!' என்றான்."ரொம்ப சந்தோஷம்... ஆரத்தி காட்டறேன்... சாமியை கும்பிடுங்கோ... அப்புறம் பேசலாம்...' என்று ஓடோடி சென்று, கற்பூரம் காட்டி கொண்டு வந்தார் பிச்சுமணி ஐயர்; அம் பாள் சன்னதிக்கும் அழைத்துச் சென்றார்.பின்னர், "நாளைக்கு நிறைஞ்ச நாள் தான். பொறுப்பேத்துண்டு நல்லா பண்ணுங்கோ...' என் றார்.சுவாரஸ்யமில்லாமல் சரவணன் கேட்டுக் கொண்டிருந் தாலும், தான் அர்ச்சகராய் செய்ய வேண்டியவைகளை, ஐயர் லிஸ்ட் போட்டதில் வயிறு கலங்கியது.
ஒன்றும் தோன்றாமல், ஐயரின் பின்னால் அவர் வீட்டுக்குச் சென்றான்."லட்சுமி! கோவில்லே அர்ச்சகராய் சேர ஒரு அம்பி வர் றார்ன்னு சொல்லலே... இவர் தான் சரவணன். உப்புமா ஆயிடுத்துன்னா சொல்லு. ரெண்டு பேரும் உட்கார்றோம். டிகாஷன் இருந்தா, முதல்லே ஒரு வாய் காபி கலந்து கொடு...' என்றார் .அடுத்த நாள் பொறுப் பேற்றுக் கொண்டதிலிருந்து சரவணன், "என்னடா இப்படி மாட்டிக் கொண்டோம்...' என்ற ரீதியில், மிகவும் சங்கடப்படலானான். காலையில் எழுந்து, பால் வாங்கி, குளித்து, நைவேத்யம் தயார் செய்ய, பிச்சுமணி ஐயரே ஒப்புக் கொண்டு செய்த போதிலும், அர்ச்சகராய் ஆறரை மணிக்காவது சரவணன் குளிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. ஒவ்வொரு சன்னதியாய், ஏழு சன்னதிகளுக்கும், எல்லாம் செய்வது, ஒரு பெரும் உழைப்பாக தோன்றியது. ஐயர் சொன்னது போல, அந்த காலை நேரத்தில் வழக்கமாக வரும் ஓரிரு பெரும் புள்ளிகளுக்காக, பயந்து, பயந்து, நடையை திறந்து காத்திருப்பதை, அவன் தன்மானம் கேலி செய்தது."ஓய் ஐயிரே! இத்தனை நிதானமாவா தீபாராதனை காட் டுவே... வயசு பையன் சுறுசுறுப்பா இருக்க வேணாமா?' ஒரு ஊர் பெரும்புள்ளி பழக்க தோஷத்தில் இவனையும், "ஐயிரே' என்று கூப்பிட்டு, ஒரு நாள் சப்தம் போட்ட போது, இவனுக்கு மானமே போனது மாதிரி ஆகிவிட்டது.— "அம்பி. ஒரு மந்திரமும் காதிலேயே விழலயே... என்ன அர்ச்சனை பண்ணினே?'— "ஏம்ப்பா... நான் தான் ஏழரைக்கு வர்றேன்னு சொல் லிட்டு தானே போனேன். அதுக்குள்ளே யார் அபிஷேகம் பண்ண சொன்னது? பால் கொண்டு வந்து, திருப்பி எடுத்துட்டா போக முடியும்? அலங்காரத்தை கலைச்சுட்டு மறுபடியும் அபிஷேகம் பண்ணு... அதுக்கு தானே இருக்கே?'— "அட! மட, மடன்னு அலங்காரத்தை பண்ணிட்டு திரையை விலக்குய்யா... நேரமாவுது, ஜனங்க கடைசி பஸ் பிடிச்சாகணும்... இப்படி மசமசன்னா இருப்பே?'— "அர்ச்சனை டிக்கெட் தான் வாங்கிட்டோமில்லே... தட்டிலே ஒரு ரூபா போட்டா போதும்!'


பல்வேறு பக்தர்களின், ஏச்சுப் பேச்சுகளிடையே, அர்ச்சகர் தொழில் இப்படி கேவலப் படுமென்று, நினைக்கவில்லை சரவணன் .சரவணன் பார்த்த பெரிய, பெரிய கோவில்களிலெல்லாம், அர்ச்சகரின் தட்டில், இவனே பத்து ரூபாய் நோட்டைபோட்டிருக்கிறான். தட்டு நிறைய சேரும் ரூபாய் நோட்டு, சில்ல ரையை அள்ளி ஒரு பாத்திரத்தில் போட்டுவிட்டு, மறுபடியும் வெறும் தட்டோடு தீபாராதனை காண்பித்து வந்து நீட்டுவர் அர்ச்சகர்கள். அப்படிப்பட்ட உசத்தியான கோவில்களையெல்லாம் விட்டுவிட்டு, இந்த மூலையில், இப்படிப்பட்ட கோவிலில், போஸ்டிங் போட்டுவிட்டதை நொந்தபடி யோசிக்கலானான்.ஆளாளுக்கு அதிகாரம் செய் கின்றனரேயன்றி, தட்டில் ஒரு ரூபாய்க்கு மேல் போடும் பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருவதில்லை. இது ஒரு பரிகார ஸ்தலமாக இல்லாததால், டூரிஸ்ட் பஸ் பக்தர்கள் வருவதில்லை.தினமும் காலையில் வழக்கமாக வரும் பத்து பேர், இரவில் அம்பாள் சன்னதி முன் சவுந்தர்யலகரி சொல்லித்தரும் ஒரு மாமியும், நாலு மாணவிகளும் தான். ஏதாவது செவ்வாய் ராகு காலம், வெள்ளிக்கிழமை என்றால், உள்ளூர் கூட்டம் வரும்.
ஆக, உடம்பை வருத்தி, வரும்படியே இல்லாமல், இந்த வசதியில்லாத கிராமத்தில் குப்பைக் கொட்டுவது, சரவணனுக்கு பெரும் சவாலாக இருந்தது.இவனுடைய நண்பன், சேலத்தில் ஒரு செழிப்பான கோவிலில் போஸ்டிங் வாங்கி, அத்தனை வசதியுடன், தினமும் தட்டில் குறைந்தது இருநூறு, முன்னூறு தேறுவதாக தொலைபேசியில் சொன்னான். அதுவே சரவணனை சிந்திக்க வைத்தது.இப்படி இங்கே கிடந்து அவஸ்தைப் படுவதை விட, சொல்லாமல் கொள்ளாமல் மெடிக்கல் லீவில் சென்றால், பிரச்னை தீர்ந்துவிடும். இந்த கோவிலுக்கு வேறு ஒரு இளிச்சவாயனை போஸ்டிங் போட்டு விட்டால், தான், நிதானமாக ஏதாவது ஒரு பணக்கார கோவிலுக்கு, பணத்தை கொடுத்தாவது டிரான்ஸ்பர் வாங்கிக் கொள்ளலாம். இப்படி சரவணனின் எண்ண ஓட்டம் தீர்மானித்து விட்டது. ஒரு மாத காலமாக அர்ச்சகர் வேலை பார்த்ததில் அலுப்பு மேலிட, இன்றைக்கே சாவியை ஒப்படைத்துவிட்டு, பஸ் ஏறிவிட வேண்டுமென்று காத் திருந்தான் சரவணன்.இந்த ஒரு மாத காலமாக, இவனுடனேயே ஒத்தாசையாக, தினமும் கூடமாட எல்லா வேலைகளையும் செய்தார் பிச்சு மணி ஐயர். இன்று, தான் எதிர்ப்பார்த்த போது, பிச்சுமணி ஐயர் ஏன் வரவில்லை என்று சரவணனுக்கு ஆவலும், ஆத்திரமும் மிகுந்தது. ஐயர் வீட்டிற்கே போய் சாவியை கொடுத்து விட்டு சென்று விட வேண்டியது தான் என்ற முடிவோடு கிளம்பினான்.ஐயர் குடியிருந்த தெருவில் நுழைந்தவுடனேயே, ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்துள்ளதாக சூழ்நிலை அச்சுறுத்தியது. ஐயர் வீட்டின் முன் ஜனங்கள்... மாமியின் அழுகுரல்.""இப்படி சொன்னதை கேட் காம என்னை நிற்கதியா விட்டுட்டு போயிட்டேளே!'' மாமியின் அலறல், சரவணன் காதில் ஈட்டியாய் பாய்ந்தது.


""நானே சொல்லியணுப் பணும்ன்னு பாத்தேன்... நீயே வந்துட்டே. நேத்தி ராத்திரி ஐயர் காலமாயிட்டாராம். மூணு நாளாவே நல்ல ஜுரமாம். மாமி வேணாம்ன்னு சொல்லியும் கேட்காம, "தினமும் அம்பாளையும், ஈஸ்வரரை தரிசிக்காம இந்த உடம்பு எதுக்கு?'ன்னு குளிச்சுட்டு, கோவிலுக்கு வந்து, நம்ப கிட்டே எதுவும் காட்டிக்காமே சன்னதியிலேயே கழிச்சிருக்கார்.""நேத்து வந்து படுத்ததும் ஜுரம் ஜாஸ்தியா போச்சாம். பாவம், குழந்தை, குட்டி, சொந்தம்ன்னு யாருமே இல்லே... எல்லாம், "அம்பாள்' தான்னே காலத்தை கழிச்சுட்டார்.""நாங்க, "அர்ச்சகர் வேலைக் கப்புறம், ஏதாவது மெஸ் மாதிரி வைச்சு தொழில் பண்ணுங்களே...'ன்னு சொன்னோம்...""ஆனால் அவரோ, "அர்ச்சகர்ங்கறதை ஒரு வேலைன்னு நான் நினைக்கலே. சாட்சாத் பகவானுக்கும், அம்பாளுக்கும் கைங்கர்யம் செய்ற பாக்யமாத்தான் நினைக்கறேன். அதனாலே, வேற தொழில்ன்னு பண்ண ஆரம்பிச்சா, தினமும் ஈஸ்வர கைங்கரியம் விட்டு போயிடுமோன்னு பயமாயிருக்கு!'ன்னு சொன்னார்... அத்தனை மனப்பக்குவம் இவருக்கு,'' என்று, ஐயரைப் பற்றி பொறுப்பாளர் கூறியபோது, பீறிட்ட அழுகையை சரவணனால் கட்டுப்படுத்த இயலவில்லை.""இன்னிக்கு கோவில் நடையை திறக்க வேண்டாம். ஐயர் காரியம் முடியட்டும்,'' என்று, மற்ற ஏற்பாடுகளை கவனிக்க போய்விட்டார் பொறுப் பாளர்.தெளிந்த மனதோடு, ஐயரின் பூத உடலை நெருங்கி கும்பிடு போட்டான் சரவணன்."என் அம்பாளை விட்டு போயிட மாட்டயே?' என்று பிச்சுமணியின் மவுனம் கேட்பதாக தோன்றியது!சரவணனின் கண்களிலிருந்து பெருக்கெடுத்த நீர்துளிகள், ஐயருக்கு ஆறுதலான பதிலை தந்திருக்கும்!